சகல பிதாக்களிலும் அன்புள்ள பிதாவே! தேவரீர் அடியேனுக்குச் சீவியகாலம் எல்லாம் அன்னபானம் அளித்து என்னைக் காப்பாற்றினீரே. அடியேனுக்குத் தேவரீருடைய வரப் பிரசாதங்களைத் தந்து தேவநற்கருணையில் தேவரீருடைய திருக் குமாரனாகிய சேசுகிறீஸ்து நாதருடைய திரு சரீரத்தையும் விலைமதியாத உதிரத்தையும் அளித்து, என் ஆத்துமத்தை ஸ்திரப்படுத்திக் காத்தருளினீரே. இந்தப் பரம உபகாரங்களைக் குறித்தும் நான் அனுபவிக்கிற சகல நன்மைகளைக் குறித்தும் அநவரதகாலம் தேவரீருக்கு நன்றியறிந்த மனதோடு தோத்திரம் செய்கிறேன். நித்திய சீவியம் தரும் இந்தப் பரம போசனத்தை நான் இவ்வுலகில் அனுபவித்த பின்பு, இந்த மேலான சீவியத்தை அடையாமல், அடியேன் கெட்டுப் போகாத படிக்குச் செய்தருளும். பிதாவே வெல்லப்படாத திடனைத் தரும் இந்தப் பரம ஒளஷதத்தை நான் சாகுந்தருவாயில் அடைந்து, என் ஞான சத்துருக்களை வென்றொழித்து, மோசமின்றி அடியேன் தேவரீரிடத்தில் சேரும் பொருட்டு அநுக்கிரகித்தருளும். பிதாவே, தேவ நற்கருணையில் மெய்யாகவே எழுந்தருளியிருக்கும் சேசுவே! என் சீவியமே, என் பாக்கியமே, என் மதுரமே, அடியேன் உம்மை அநேகம் முறை பக்திக் குறைவாய் அருந்தியிருந்தாலும், இந்த ஆபத்து நேரத்தில் என்னைக் கைவிடாதேயும். என்னை ஸ்திரப் படுத்தும். அடியேன் என்றென்றைக்கும் மோட்ச பேரின்பத்தைச் சுகிக்கும்படிக்குக் கிருபை கூர்ந்தருளும், சுவாமீ.