ஆடும் திரைகடலே உன்னை ஆடிடச் சொல்வது யார் ஓடும் ஆறுகளே நீங்கள் ஓதும் பெயரது யார்


ஆடும் திரைகடலே உன்னை ஆடிடச் சொல்வது யார்

ஓடும் ஆறுகளே நீங்கள் ஓதும் பெயரது யார்

ஆழமும் அகலமுமே இல்லா ஆண்டவர் பெயராமே

அவர்தம் ஆற்றலும் பெரிதாமே


1. சுழலும் காற்றுகளே உங்கள் சீற்றம் யாராலே

வீசும் தென்றல்களே நீங்கள் பேசும் மொழி யாதோ ஆக்கவும் அழிக்கவுமே வல்ல ஆவியின் செயல்தாமே

அதுவும் ஆண்டவர் இயல்பாமே


2. பாடும் பறவைகளே உங்கள் புகழின் நாயகர் யார்

கானக் குயிலினமே உங்கள் கானத் தலைவர் யார்

அன்பிலே இணைந்திடவே அழைக்கும்

ஆண்டவர் குரலாவோம்

அவர்தம் அமைதியின் தூதராவோம்


3. சான்றோர் ஆன்றோரே உங்கள் ஞானம் எவராலே

ஆன்மீகப் பெரியோரே உங்கள் ஆழம் எதனாலே

அனைத்தையும் அறிந்திடுவார் எம்மை ஆண்டிடும் இறைவனவர்

வாழ்வும் வழியும் ஒளியுமவர்


4. நெருப்பு ஜூவாலைகளே நீங்கள் உயர்வது எதனாலே

எரியும் தீபங்களே நீங்கள் ஒளிர்வது எவராலே

நெருப்பை விதைத்தவனாம் பூவில் நீதியின் கதிரவனாம்

நமது நெஞ்சுக்கு இனியவனாம்


5. இடிமின்னல் ஓசைகளே உங்கள் முழக்கத்தின் பொருள் என்ன

அதிர்ந்திடும் பூமிகளே நீங்கள் அறிவிக்கும் செய்தி என்ன

புதியதோர் வானகமும் புதிய பூமியும் வந்திடுமே

இறைவன் ஆட்சியும் மலர்ந்திடுமே