ஏன் தேவன் மனிதன் ஆனார்?

பாவத்திலிருந்து மனிதர்களை மீட்டு பரலோகப் பேரின்ப வாழ்வை அவர்களுக்குக் கொடுக்க விரும்பிய சர்வ வல்லபக் கடவுள், எது செய்தாலும் அரையும் குறையுமாய்ச் செய்பவர் அல்ல. கரை காணாத தேவசிநேகத்தின் பெருங்கடலாகிய கர்த்தர் நம்மீது காட்டும் கருணைக்கும் அன்பிற்கும் அளவே இல்லை என்று காட்டவே தேவன் மனிதனானார்.

பாவம் கொடியது, அப்பாவத்தால் நீதியுள்ள தேவனுக்கு ஏற்படும் காயமும் நிந்தையும் கொடியது. தேவநீதியோ அளவற்றது. அதற்கு ஏற்பட்ட பங்கம் நீங்க வேண்டுமானால், அதற்கு உரிய பரிகாரமும் அளவற்றதாயிருக்க வேண்டும். அற்ப மனிதனுக்கோ அத்தகைய பரிகாரத் தைச் செய்ய வல்லமையில்லை! அதனால் தான் பரிசுத்த பரம திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன் இப்பரிகாரத்தைச் செய்ய முன் வந்தார். 

ஈன மனிதர்களாகிய நம் மனுஷீகம் தெய்வீகப் பேரின்பக் கடவுளின் தெய்வீகத்தில் அடங்கி, நித்திய சமாதான நிலையை அடைவதையே நாம் பரலோகப் பேரின்பம் என்கிறோம். அதாவது ஒரு விதத்தில் மனுஷீகம் தெய்வீகத்தில் பங்கடைய வேண்டும். இந்த உரிமையை மனிதர்களுக்குத் தர விரும்பிய தெய்வீகம் நமது மனுஷீகத்தோடு கலந்து கொள்ள விரும்பியது. மனிதன் தானாக மேலேறி தெய்வீகத்தோடு சமாதானமடைய முடியாது என்பதால், தேவனே கீழிறங்கி மனிதன் ஆனார்; மனுஷீகத்தை உயர்த்திப் புனிதப்படுத்தினார்; அதன் மீது தெய்வீக வரப்பிரசாதத்தைப் பொழிந்தார்; அதைத் தெய்வீகத்தில் பங்கடையவும் வைத்தார். இதற்காகத்தான் தேவன் மனிதனானார்.

இந்த உண்மையை அறிந்தபின், நம் உள்ளம் மகிழாமல் இருக்கக் கூடுமா? நெஞ்சம் நெகிழாமல் இருக்கலாகுமா? இருதயம் பூரித்துத் துடிக்காமல் இருக்க இயலுமா? எங்கும் பரந்து விரிந்து நிறைந்த சர்வேசுரன் நம்மைப் போன்ற ஏழை மனிதன் ஆனார் என்ற இந்த சத்தியம் எந்நாளும் நம் மனதில் இரைந்து, சப்தித்து ஒலிப்பதாக.