ஆண்டவரே! என்பேரில் இரக்கமாயிரும். நிர்ப்பாக்கியப் பாவியாயிருக்கிற என்பேரில் இரக்கமாயிரும். உமது நீதியின் படியே நான் துன்பதுரிதங்களை அனுபவிக்கப் பாத்திரமுள்ளவனா யிருக்கிறேன். சுவாமீ, நீர் நீதிபரராயிருக்கிறதினால் எங்கள் பாவப் பரிகாரத்துக்காக எங்களை உமக்கு தயார் செய்கிறதற்கு எங்களுக்குத் துன்பங்களை அனுப்புகிறீர். என் சீவியகாலத்தின் சோதனைகளை விதிப்பயனென்று கருதாமல், உம்மால் அனுப்பவும் நடத்தவும்பட்டு வருகிறதென்று அறிந்து விசுவசிக்கிறேன். என் பாவங்களுக்குத் தக்கப்படி என்னைத் தண்டித்து நடத்தாமல், உமது பெருத்த இரக்கத்துக்குத் தக்கப்படி என்னை நடத்தியருளும். நீர் எனக்குத் துன்ப துரிதத்தை அனுப்பும்போது பொறுமையோடு பொறுக்கவும், தெய்வசித்தத்தின்படியே ஆகக்கடவது என்கிற வார்த்தை என் நாவை விட்டு அகலாதிருக்கவும் செய்தருளும். மகா நேசத்துக்குரிய பிதாவே,. துன்பங்கள் என்னைச் சூழ்ந்து கொள்ளவே, என் ஆத்துமமானது கசப்பான சஞ்சல சாகரத்தில் மூழ்கிப் போயிற்று. எனது சிருஷ்டிகரும் மீட்பருமான உம்மிடத்தில் வருவதைப் பார்க்கிலும் வேறெந்த இடத்திற்குப் போவேன்? சுவாமீ உமது கையின் கீழும், தண்டனையின் கோலின் கீழும் அமைந்திருக்கிற என்னை நோக்கிப்பாரும். என் சித்தத்தை உமது சித்தத்தோடு ஒன்றாகச் செய்தருள உம்மைத் தாழ்ச்சியோடு மன்றாடுகிறேன். நீர் என் பலவீனத்தையும் துன்பத்தையும் அறிவீர். நீர் என்னை நோக்கி என் கண்ணீரைத் துடைத்து சந்தோஷப் படுத்தும். என் ஆத்துமத்தை உமது திருக்கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன். அதை கையேற்றுக் கொள்ளும், ஆமென்.