எங்கள் இரட்சகராயிருக்கிற சேசுகிறீஸ்துவே, தேவரீர் முதல் முறை வருகையில், உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தஞ் செய்ய உமது தூதனை அனுப்பினீரே, அதுபோலவே தேவரீர் உலகத்தை நியாயம் தீர்க்க இரண்டாந்தரம் வருகையில், நாங்கள் உமக்கு முன்பாகப் பிரியமுள்ள சனங்களாய் நிற்கத்தக்கதாக அநுக்கிரகித்தருளும் சுவாமீ.
இப்பொழுது உமது இரகசியங்களின் பொக்கிஷக்காரரும் பணிவிடைக்காரருமான ஒரே மேய்ப்பனுக்கு கீழ்ப்படியாதவர்களின் இருதயத்தை நீதிமான்களுடைய ஞானத்துக்குச் சரியாய்த் திருப்பி, உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தம் செய்யக் கிருபை செய்தருள வேண்டுமென்று, பிதாவோடும் இஸ்பீரித்துசாந்துவோடும் ஒரே தேவனாக என்றென்றைக்கும் சீவியருமாய், இராச்சிய பரிபாலனம் செய்கிறவருமான உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம்.
மிகவும் பாக்கியஸ்தரும் மெத்தவும் அர்ச்சியசிஷ்டவருமாகிய எங்கள் பிதாவே! எங்கள் சிருஷ்டிகரே! எங்கள் இரட்சகரே, எங்களைத் தேற்றுகிறவரே, பரமண்டலங்களிலே இருக்கிற சம்மனசுகள் இடத்திலும் அர்ச்சியசிஷ்டவர்கள் இடத்திலும் வியாபித்திருந்து அவர்கள் உம்மை அறியும்படி அவர்களுக்கு ஞானப்பிரகாசம் தந்தருளி, அவர்களிடத்தில் உமது சிநேக அக்கினியைப் பற்றி எரியச் செய்கிறீர்.
அதேதெனில் தேவரீரே ஆண்டவர், பிரகாசமும் சிநேகமுமாயிருக்கிறீர். ஆதலால் அவர்களிடத்தில் வாசம் செய்து, அவர்களுக்குச் சுகிர்த ஒளியாய் விளங்கி அவர்களைச் சிநேக அக்கினிமயமாக்கிப் பேரின்ப பாக்கியத்தில் அவர்களை நிரப்புகிறீர். நித்திய பரம நன்மை நீரே, உம்மிடத்திலிருந்து சகல நன்மைகளும் வருகிறதுமன்றி, தேவரீர் இல்லாமல் அவைகளில் ஒன்றாகிலும் வராது.
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, தேவரீருடைய உபகாரங்களின் விஸ்தாரத்தையும், வாக்குத்தத்தங்களின் மாட்சிமையையும், மகத்துவத்தின் உந்நதத்தையும் உம்முடைய சித்தத் தீர்மானங்களின் ஆழ்ந்த கருத்தையும் நாங்கள் கண்டுபிடிக்கத்தக்கதாக, காந்தியுள்ள பிரகாசக்கதிர்களால் உம்மை எங்களுக்கு தெரியப்படுத்தியருளும். உம்முடைய இராச்சியம் வருக, தேவரீர் உம்முடைய இஷ்டப் பிரசாதத்தினால் எங்களிடத்தில் இராச்சியப்பாரம் செய்யதக்கதாகவும், உம்முடைய பேரின்ப இராச்சியத்தில் எங்களைச் சேர்ப்பிக்கத்தக்கதாகவும் கிருபை செய்தருளும்.
அதிலே தேவரீர் பிரத்தியக்ஷமாய்த் தரிசிக்கவும், உத்தமவிதமாய்ச் சிநேகிக்கவும், நித்தியமாய் அனுபவிக்கவும் படுகிறீர். மேலும், உம்மோடு கூட இருக்கிறதினால் அநந்த பாக்கியமும் கிடைக்கின்றது. நாங்கள் உமது பேரிலேமாத்திரம் சிந்தனை வைக்கிறோம்.
நாங்கள் முழு இருதயத்தோடு உம்மை எப்போதும் ஆசிக்கிறோம். எங்கள் முழு ஆத்துமத்தோடு எங்கள் கருத்தெல்லாம் உம்மிடத்தில் செலுத்தி, எல்லாவற்றிலும் உமது தோத்திரத்தை நாடி நிற்பதினாலும், எங்கள் முழுப் புத்தியோடு எங்கள் ஆத்துங்களிலும் சரீரங்களிலுமுள்ள தத்துவங்களை எல்லாம் மற்ற எந்தக் காரியங்களுக்கும் உபயோகிக்காமல் உம்மைப் பற்றி உம்முடைய ஊழியத்தில் அவைகளை உபயோகிப்பதினாலும், எங்கள் சர்வ பல சத்துவங்களோடு அடியோர்கள் உம்மைச் சிநேகிக்கத்தக்கதாகச் செய்தருளும்.
உம்முடைய சித்தம் பரமண்டலங்களிலே செய்யப்படுவதைப்போல் பூமியிலேயும் செய்யப்படுவதாக. மேலும், அடியோர்கள் உம்முடைய சிநேகத்திற்கு எல்லா மனுஷர்களையும் இழுக்கப் பிரயாசமும் பட்டு, அவர்களுக்கு நேரிடுகிற நன்மை எங்களுக்கு நேரிட்டாற் போலச் சந்தோஷப்பட்டு, துன்பங்களில் அவர்கள் மேல் மனமிரங்கி, எந்தக் காரியத்திலும் எவனுக்கும் தின்மை அவமானஞ் செய்யாமல் எங்களைப்போல மற்றவரையும் சிநேகிக்கக்கடவோமாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்றுதாரும். எங்கள் ஆண்டவரும் தேவரீருக்கு அத்தியந்த நேச குமாரருமாகிய சேசுநாதரை எங்களுக்குத் தந்தருளும். அவர் எங்களுக்குக் காட்டின பட்சத்தையும், எங்களுக்காக அவர் சொல்லிச் செய்து சகித்துக் கொண்டு வந்ததையும் தேவரீர் எங்களுக்கு ஞாபகப் படுத்திச் சரியாய்த் தெளிவித்து அவர்பேரில் எங்களுக்குத் தக்க வணக்கப் பற்றுதல் கொடுக்கும்படி உம்மிடத்தில் இந்த மன்றாட்டு செய்கிறோம்.
மனோவாக்குக்கெட்டாத உமது கிருபையையும், உமது நேச குமாரனுடைய திருப் பாடுகளின் பேறுபலன்களையும், முத்திப்பேறுபெற்ற கன்னிமரியம்மாளும் உம்முடைய சகல அர்ச்சியசிஷ்டவர்களும் அடைந்த புண்ணியங்களையும் வேண்டின மன்றாட்டுகளையும் பற்றி எங்கள் கடன்களை எங்களுக்குப் பொறுத்தருளும்.
எங்கள் கடன்காரர்களுக்கு நாங்கள் பொறுப் பதைப்போல எங்களை மன்னித்தருளும். உம்மைப் பற்றி எங்கள் பகையாளிகளை மெய்யாகவே சிநேகித்து அவர்களுக்காக தேவரீரை பக்தியோடே வேண்டிக்கொள்ளுகிறோம். எவனுக்கும் தின்மைக்குப் பிரதி தின்மை செய்யாமல், உமது நிமித்தமாக நாங்கள் எல்லோருக்கும் நன்மை செய்யப் பிரயாசைப்படுவோம். எங்களால் முழுதும் மன்னிக்கப்படாதிருப்பதை நாங்கள் குறையற மன்னிப்பதற்கு எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும் சுவாமி.
மறைவும் பிரசித்தமும் சடுதியும் அலட்டுமாகிய சோதனையில் எங்களைப் பிரவேசிக்கவிடாதேயும். கடந்ததும் இருக்கிறதும் வருவதுமாகிய தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.
உலக இரட்சகர் பிரார்த்தனை சொல்லவும்....