ஐம்பத்து மூன்று மணிச் செபம் துவக்குகிற வகையாவது

அளவில்லாத சகல நன்மைச் சுரூபியாயிருக்கிற சர்வேசுரா சுவாமீ! நீச மனுஷருமாய் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள் மட்டில்லாத மகிமைப் பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய சந்நிதியிலே இருந்து செபஞ் செய்யப் பாத்திரம் ஆகாதவர்களாயிருந்தாலும், தேவரீருடைய அளவில்லாத தயையை நம்பிக்கொண்டு, தேவரீருக்கு ஸ்துதி வணக்கமாகவும், அர்ச். தேவமாதாவுக்குத் தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணிச் செபம் செய்ய ஆவலாயிருக்கிறோம். இந்தச் செபத்தைப் பக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசையைக் கட்டளை பண்ணியருளும் சுவாமீ.

சகலமான புண்ணியங்களுக்கும் விசுவாசம் என்கிற புண்ணியம் அஸ்திவாரமாயிருக்கிறபடியினாலே முதன்முதலாக விசுவாச மந்திரம் சொல்லுகிறது.

பின்பு மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனுஷனும் ஒன்றாயிருக்கிற சேசுநாதசுவாமி படிப்பித்த கர்த்தர் கற்பித்த செபம் சொல்லுகிறது.

பரிசுத்த கன்னியாயிருக்கிற தேவமாதாவினுடைய பிரதான மகிமைகளைக் குறித்து மூன்று பிரதான புண்ணியங்களைக் கேட்கிறது.

பிதாவாகிய சர்வேசுரனுக்குக் குமாரத்தியாயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ விசுவாசம் என்கிற புண்ணியம் உண்டாகிப் பலன் அளிக்கும்படிக்கு உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். ஒரு அருள்.

சுதனாகிய சர்வேசுரனுக்குத் தாயாராயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ நம்பிக்கை என்கிற புண்ணியம் உண்டாகி வளரும்படிக்கு உம்முடைய திருக் குமாரனை வேண்டிக்கொள்ளும். ஒரு அருள்.

இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ளவளாயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ சிநேகம் என்கிற புண்ணியம் உண்டாகி அதிகரிக்கும்படிக்கு உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். ஒரு அருள் திரித்துவ தோத்திரம் சொல்லியபின், ஒரு பர.