பிரேதம் எடுத்துக்கொண்டு போகையில் சொல்லத்தக்க வீரமாமுனிவர் பாடிய தேவாரம் கருணாம்பரப் பதிகம்
மூவாமுதலா முற்றிணையா மூவாளாயோர் மெய்ப் பொருளாய்த் தாவாநயனாய்த் தயைக்கடலாய்த் தானாய்த் தனி முத்தொழிற்பரனாய்க் காவாநின்றென் னுளத்தரசாய்க் கருணாம் பரமா யாதிபரா, ஆவாயுனனை அனைவருமுன் னலர்த்தாட் பணியாவாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (1)
நேராநினையிற் றன்வயத்தாய் நெடுங்காற் கடந்தேயென்று முளாய்ச் சூராருடல் செய் யுருவிலனாய்த் தொக்கநன்மை யாவுமுளாய் பேராதணுகா தெங்குமுளாய்ப் பின் மூவுலகோர் காரணனா, யோராதிவற்றை யுலகெல்லா முன்றாட்பணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (2)
வான்கொள் ளொளி செய் சுடர்படைத்தி மண்கொள் பல நல்லுயிர் படைத்தி, நான்கொள் கனியோ டலர்படைத்தி கதிர் கொண்மணியோ டணிபடைத்தி யான்கொள் ளெவையு நீ படைத்தி யிவைசால்பன்றென் றுனைத்தந்தி, யூன்கொள்ளுரு நீயாயின பின்னுன்றாட்பணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (3)
தனிமைத் தலைமை யுவதென்பார் தயையின் மிக்குள்ளன் புணர்ந்தோர், இனிமைத் தலைமை யுனதென்பாரிணையாச் சீர் கொள்ளுன் குணத்தாற் கணிகைத்தலைமையுனதென்பார் கவினே களியே யுனையென்பார், நனிமெய்யிஃதா யனைவருமுன்னற்றாட் பாணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (4)
பொருளே செய்தப் பொருளினுமுட் புணர்ந்தப் பொருள் கெட்டழியாய்நீ, யருளே புரிந்து செய்பொருளா லாமோர் பயனும் வேண்டாய்நீ, மருளேயறியாய் தயைமறவாய் மாறாநட்பெம் மேலொழியா, யிருளேமிக வீ துண ராவுன் னிணைத்தாட் பணியாவாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (5)
சுவையேயூட்டி யளிப்போய் நீ தொன்னோய் மாற்று மருந்தோய்நீ, நவையே நீக்கிக் களிப்போய் நீ நசையேயாற்று மினியோய்நீ, யவையே புகழி னுயர்ந்தோய்நீ யமரர்புகழப் படுவோய்நீ, யிவையே யுண்டாய்ப் பின்னுலகுன் ணிணைத்தாட் பணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (6)
ஒளியே நலதே லிவ்வொளியை யொளித்துக் கடந்த வொளியோய் நீ, களியேநலதே லாசையறக் கசடற்றொழியாக் களியோய்நீ, தெளியே வருநூற் கலைநலதேற் றிறநூலுணர்த்துந் தெளியோய்நீ, வெளியேயிவையோர்ந் தனைவருமுன் மென்றாட் பணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (7)
கானார்மலர்பெய் துன்றிருத்தாட்கருத்திற்கொள்வார் துயர் கொள்ளார், நானாவழியே நனிவாழ்வார் நயமும்புகழு மிக்கனபின், வானார்பயன்கொள் வாரென்றாய் மாறாமெய்யிஃதாகியிவண், டேனாரின்ப நக்குவருன் றிருத்தாட்பணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (8)
மலையே யுன்னல்லானிலையா மதுவேயமுதே கொல்நெஞ்சாங், கலையேவெளிறா மொளியிருளாங் களியேதுன்ப மாந்திருவி, னலையேவற்றி னல்குரவா மடலேவலியே குறையாமிந், நிலையேயாகி யுலகெல்லா நின்றாட்பணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (9)
கார்சேர்மின்னே யிங்கிளமை கடல்சேர் திரையே யிங்குடைமை, நீர்சேர் நுரையே யிங்கினிமை நிசிசேர் நுளம்பேயிங் கொளிமை, சீர்சேருன்னைச் சேர்ந்தவர்க்கே திறம்பா வொழியா வாழ்வுளதாம், பார்சேரெவரு மிஃதறிந்துன் பனித் தாட்பணி யாவாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (10)
வல்லாரில்லை யுனையல்லால் வாழாரில்லை யுனைச் சேர்ந்தா ரில்லாரில்லை நீயிரங்க விவணீமுனியக் கெடாரில்லை, செல்லார் வானோர் தொழுதேத்தும் சொல்லற் கரிய வுன் பெருமை, கல்லாருண்டோ பின்புல குன் கவின் றாட் பணியாவாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (11)
வான்மே லமர ரத்தனையு மண்மேலரச ரத்தனையும், நூன்மே லுயர்வோ ரத்தனையு நுண்மாண் பறிவோ ரத்தனையும், கான்மேன் முனிவ ரத்தனையுங் கன்னிமடவா ரத்தனையும், மேன்மேலிறைஞ்ச மற்றுலகுன் மென்றாட் பணியா வாறென்னோ - கருணாம்பரம், கருணாம்பரம். (12)