குரு தேவ நற்கருணை எழுந்தருளச் செய்த பின்பு

என் ஆண்டவரே! தேவரீர் செய்த இந்த அற்புதத்தை நான் கண்ணால் கண்டும் தேவரீருக்கு ஏற்காத துரோகங்களைச் செய்யத் துணிந்தேனாகில் என் அக்கிரமமும் நன்றி கெட்டத் தன்மையும் இவ்வளவென்று சொல்லி முடியுமோ! இந்தப் பூசிதமான சடங்கைக் கொண்டு, தேவரீர் எனக்குக் காட்டுகிற உமது பாடுகளின் கடின வேதனைகளையும், உத்தானத்தின் மகிமையையும் நான் ஒருபோதும் மறப்பதில்லை , சுவாமீ. அடிகளால் கிழிந்து தெறிபட்ட உமது திருசரீரமும் எங்களுக்காகச் சிந்தின திரு இரத்தமும், இதோ! என்கண் முன்பாக இந்தப் பீடத்தின் மேல் பிரத்தியக்ஷமாய் எழுந்தருளி இருக்கின்றதாமே. நித்தியானந்த மகிமைப் பிரதாபமுள்ள பிதாவே! இதோ தேவரீர் சித்தம் இரங்கி அடியோர்களுக்குத் தந்தருளின மாசற்ற செம்மறிப்புருவையைத் தேவரீருக்கு மெய்யாகவே பலியாக ஒப்புக் கொடுக்கிறோம். முன்னதாக அபேல் ஆபிரகாம் மெல்கிசெதேக் கென்கிற மகாத்துமாக்கள் கொடுத்த பலியெல்லாம், இந்த மெய்யான பலியின் சாயலாயிருந்ததொழிய வேறல்ல. உமது நித்திய நேசரான சுதனுமாய் எங்கள் ஆண்டவருமாயிருக்கிற சேசுகிறீஸ்து ஒருவர் மாத்திரமே உமது பீடத்துக்கு தகுதியுள்ள பலியாயிருக் கிறார். நாங்களும் அவரைத்தானே தேவரீருக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கிறோம். இந்த உன்னத பலியைத் தேவரீருக்குத் தங்கள் தங்கள் மன மொழிகளால் கொடுக்கிறவர்கள் எல்லாம் அதனால் வரும் பலனை அடையக்கடவார்கள். 

என் ஆண்டவரே! திருச்சபையில் உட்பட்டு மரித்த எல்லா விசுவாசிகளுடைய ஆத்துமங்களுக்கும் இந்தத்திவ்விய பலியின் பலன் பங்குண்டாயிருக்கக்கடவது. விசேஷமாய், இந்தத் திவ்விய பலியைக் குறித்து (*இன்னார் இன்னாருடைய) ஆத்துமங்களின் வேதனையை நீக்கி அவர்களுக்கு இளைப்பாற்றியைக் கட்டளையிட்டருளும்.

அநந்த தயாபரரான பிதாவே! இனி ஒருநாள் எங்களுக்கும் இந்த உபகாரத்தைக் கட்டளையிட்டு, நித்திய காலம் நாங்கள் அப்போஸ்தலர் வேதசாட்சிகள் சகல. அர்ச்சியசிஷ்டவர்களுடனே கூடத் தேவரீரைச் சிநேகித்துத் தோத்தரித்துக் கொண்டிருக்கும்படியாய் எங்களுக்கு அநுக்கிரகம் செய்தருளும் சுவாமீ.