வானகத் தூதர் அணி மகிழ்வதாக கிறிஸ்துவின் ஒளி இதோ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வானகத் தூதர் அணி மகிழ்வதாக

கிறிஸ்துவின் ஒளி இதோ - இறைவனுக்கு நன்றி

கிறிஸ்துவின் ஒளி இதோ - இறைவனுக்கு நன்றி

கிறிஸ்துவின் ஒளி இதோ - இறைவனுக்கு நன்றி


வானகத் தூதர் அணி மகிழ்வதாக

இத்திருச்சடங்கிலே பெருமகிழ்ச்சி பொங்குவதாக

மாண்புமிக்க மன்னரது வெற்றிக்காக

எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக.

இப்பெருஞ் சுடர்களால் ஒளிவீசப் பெற்று

இவ்வுலகும் பெருமகிழ்ச்சி கொள்வதாக

முடிவில்லா மன்னரது பேரொளியால்

உலகெல்லாம் துலங்கி, தன்னைச் சூழ்ந்த

இருளனைத்தும் ஒழிந்ததென்று உணர்வதாக.

திருவிளக்கின் பெருஞ்சுடரால் அழகுபெற்று

அன்னையாம் திருச்சபையும் களிகூர்வதாக.

இறைமக்கள் அனைவரது பேரொலியால்

இக்கோயில் எதிரொலித்து முழங்குவதாக.


(எனவே, இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச்

சூழ்ந்துநிற்கும் அன்புமிக்க சகோதர சகோதரிகளே,

உங்களை வேண்டுகிறேன்: என்னுடன் சேர்ந்து,

எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவீரே.

தகுதியற்ற அடியேனைத் திருப்பணியாளருள்

(திருத்தொண்டருள்) சேர்த்திடத் தயைகூர்ந்த இறைவன்தாமே

திருவிளக்கின் பேரொளியை என்மீது வீசி

இத்திரியின் புகழ்சாற்றச் செய்வாராக).


முன்மொழி:

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில்: உம்மோடும் இருப்பாராக.


முன். இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.

பதில்: ஆண்டவரிடம் எழுப்பிள்ளோம்.


முன். நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றிகூறுவோம்.

பதில்: அது தகுதியும் நீதியுமானதே.


கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய எல்லாம் வல்ல தந்தையையும்,

அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும்

இதயப் பற்றுதலோடு வாயாரப் பாடிப் புகழ்வது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்.

கிறிஸ்து ஆதாமினால் வந்த கடனை

நமது பெயரால் என்றும் வாழும் தந்தைக்குச் செலுத்தி,

பாவத்துக்குரிய கடன்சீட்டை தம் திருஇரத்தத்தால்

இரக்கமுடன் அழிந்துவிட்டார்.


ஏனெனில், பாஸ்கா விழா இதுவே

இதில், மெய்யான செம்மறியாகிய கிறிஸ்து கொலையுண்டார்

இவரது இரத்தத்தால் விசுவாசிகளின் கதவுநிலைகள் அர்ச்சிக்கப்படுகின்றன.

முற்காலத்தில், நம் முன்னோரான இஸ்ராயேல் மக்களை

எகிப்திலிருந்து விடுவித்து

அவர்கள் பாதம் நனையாமல் செங்கடலைக் கடந்து போகச் செய்தது

இந்த இரவிலேதான்.


நெருப்புத் தூணின் வெளிச்சத்தால்

பாவத்தின் இருளை அகற்றிய இரவும் இதுவே.

பூவுலகெங்கும் இன்று கிறிஸ்துவில் விசுவாசங்கொண்டவர்களை

உலகின் தீய வழியிலிருந்தும் பாவ இருளிலிருந்தும் பிரித்து,

அருள்வாழ்வில் மீண்டும் சேர்த்து தூயவராக்கியதும்

இந்த இரவிலேதான்.


சாவின் தளைகளைத் தகர்த்தெறிந்து,

கிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும்

இந்த இரவிலேதான்.

இத்தகைய மீட்பின் பயனை யாம் பெறாவிடில்

பிறந்ததால் எப்பயனும் இல்லையே.


நீர் எம்மீது தயைகூர்ந்து காட்டிய இரக்கம்

எத்துணை வியப்புக்குரியது!

அடிமையை மீட்குமாறு

மகனையே கையளித்த அளவில்லா அன்புப்பெருக்கே!

ஓ ஆதாமின் பாவமே!

உன்னை அழிக்க கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது!

இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடைய பேறுபெற்றதால்

பாக்கியமான குற்றமே!

ஓ மெய்யாகவே பாக்கியம் பெற்ற இரவே!

கிறிஸ்து பாதாளத்திலிருந்து உயிர்த்தெழுந்தகாலமும் நேரமும் அறிய

நீ மட்டும் பேறுபெற்றாய்!

இரவு பகல்போல் ஒளிபெறும்.

நான் மகிழ்வுற இரவும் ஒளிதரும் என எழுதியுள்ளது

இந்த இரவைக் குறித்தே.



எனவே, புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி

அக்கிரமங்களை ஒழிக்கின்றது, குற்றங்களைக் கழுவிப் போக்குகின்றது

தவறினோர்க்கு மாசின்மையையும்

துயருற்றோர்க்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது

பகைமையை விரட்டுகின்றது, ஆணவத்தை அடக்குகின்றது

மன ஒற்றுமையை உருவாக்குகின்றது.


ஆகவே, தூய தந்தையே, இப்புனிதமான இரவில்

உமது புகழ்ச்சிக்காக

நாங்கள் அளிக்கும் மாலைப் பலியை ஏற்றருளும்

தேனிக்களின் உழைப்பாலான

மெழுகிலிருந்து உருவான இத்திரியை

புனித திருச்சபை தன் பணியாளரின் கையால்

பக்திச் சிறப்புடன் உமக்கு ஒப்புக்கொடுத்து

மாலைப் பலி செலுத்துகின்றது.

இறைவனின் மகிமைக்காக செந்தீயாய்ச் சுடர்விட்டெரியும்

இந்த நெருப்புத் தூணின் பெருமையை அறிந்திருக்கின்றோம்.

இத்தீயிலிருந்து பல விளக்குகளை ஏற்ற,

தன் ஒளியிலிருந்து பங்குகொடுத்தாலும், அது குறைவுபடுவதில்லை.

ஏனெனில், தாய்த்தேனீ தந்த மெழுகு உருகுவதால்

இத் தீயானது வளர்க்கப்படுகின்றது.



விண்ணுக்குரியவை மண்ணுக்குரியவையோடு

கடவுளுக்குரியவை மனிதனுக்குரியவையோடும் இணைந்தது

இந்த இரவிலேதான்!

ஆகவே ஆண்டவரே, உம்மை வேண்டுகிறோம்

உமது திருப்பெயரின் மகிமைக்காக அர்ச்சிக்கப்பெற்ற இந்த மெழுகுதிரி,

இவ்வுரவின் இருளை ஒழிக்குமாறு, குறைவுபடாமல் நின்று எரிவதாக.

இது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டு,

விண்ணக விளக்குகளுடன் கலந்துகொள்வதாக.

விடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக.

ஓருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி

உம் திருமகன் கிறிஸ்துவேதான்.



பாதாளத்திலிருந்து திரும்பி வந்து,

மனித இனத்தின்மீது அமைதியுடன் ஒளிவீசி,

என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்றவர் அவரே.


எல். ஆமென்