பரிசுத்தர் என்கிற மந்திரம் சொன்ன பிறகு

மட்டற்ற தயை நிறைந்த பிதாவே! தேவரீருக்கு ஏக சுதனுமாய் எங்கள் ஆண்டவருமாயிருக்கிற சேசு கிறீஸ்துநாதருடைய திரு முகத்தைப் பார்த்து, நாங்கள் தேவரீருக்குக் கொடுக்கிற இந்தக் காணிக்கையைக் கையேற்றுக்கொண்டு, மெய்யான பொதுச் சபையாகிற திருச்சபையையும் அதன் அவயவங்களாகிய அர்ச்சியசிஷ்ட பாப்பு, மேற்றிராணிமார்களையும், சகல விசுவாசிகளையும் ஆண்டளித்துக் காத்தருளவேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். பின்னையும் எங்கள் தாய், தந்தை, உறவின்முறையார், சிநேகிதர், உபகாரிகள், பகையாளிகளுக்கும், இந்தத் திவ்விய பூசையை ஒப்புக்கொடுக்கிறவர்களுக்கும் விசேஷமாய் ( இன்னார் இன்னாருக்கு) வேண்டிய உதவி சகாயங்களைக் கட்டளை யிட்டருளும் சுவாமி. நாங்கள் கேட்கிற மன்றாட்டுத் தேவரீருக்கு அதிகப் பிரியமாகும்படிக்கு அர்ச். தேவமாதா, அப்போஸ்தலர், வேதசாட்சிகள், இவர்களுடைய மன்றாட்டுகளுடனே எங்கள் மன்றாட்டுகளையும் கூட்டித் தேவரீருக்குக் காணிக்கையாக வைக்கிறோம். முன்னாள் பிதாப்பிதாக்கள் உலக இரட்சகர் எப்பொழுது வருவாரோவென்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தாப்போல, இப்பொழுது நானும் அவர் இந்தப் பீடத்தின் மேல் எப்பொழுது எழுந்தருளி வருவாரென்று காத்திராமல் இருப்பேனோ! அவர்களிடத்திலே விளங்கின விசுவாசமும் தேவசிநேகமும் என்னிடத்திலும் விளங்கா திருக்குமோ? ஆண்டவராயிருக்கிற சேசு கிறிஸ்துவே! உலக பாவங்களை போக்குகிறவரே! எழுந்தருளி வாரும். உமது அற்புதங்களின் மேலான அற்புதமாகிய இந்தப் பரம இரகசியத்தை நிறைவேற்ற வாரும். இதோ உலகத்தினுடைய பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையானவர் எழுந்தருளி வருகிறார்.