குருவானவர் வியாதிக்காரரின் கண்ணிரண்டிலும் அர்ச். எண்ணெய் பூசுகிறபோது தான் நினைத்துச் சொல்லுகிறது
சேசுகிறீஸ்துநாதரே! தேவரீர் சிந்தின திருக் கண்ணீ ரைப் பார்த்து, நான் கண்ணினால் செய்த பாவங்களைப் பொறுத்துக் கொள்ளும் சுவாமீ.
பின்பு காதிரண்டிலும் பூசுகிற போது:
சேசுகிறீஸ்துநாதரே! தேவரீர் சிலுவையில் அறையுண் டிருக்கும்போது பொல்லாத யூதர்களுடைய தூஷணங்களைக் கேட்டுச் சகித்த உபத்திரவங்களைப் பார்த்து, நான் செவியைக் கொண்டு செய்த பாவங்களைப் பொறுத்துக் கொள்ளும், சுவாமீ.
மூக்கில் பூசுகிற போது
சேசு கிறீஸ்து நாதரே! தேவரீர் மூக்கினால் பட்ட வருத்தங்களைப் பார்த்து, நான் மூக்கினாற் செய்த பாவங்களைப் பொறுத்துக்கொள்ளும் சுவாமீ.
வாயிலே பூசுகிற போது
சேசுகிறீஸ்துநாதரே! தேவரீர் சிலுவையிலே அகோரதாகத்தால் அனுபவித்த நோக்காட்டைப் பார்த்து, நான் வாயினால் கட்டிக் கொண்ட பாவங்களைப் பொறுத்துக் கொள்ளும் சுவாமீ.
கையிரண்டிலும் பூசுகிற போது
சேசுகிறீஸ்துநாதரே! சங்கிலிகளினால் கட்டுண்டு சிலுவை மரத்தில் இருப்பாணிகளால் ஊடுருவப்பட்ட தேவரீருடைய திருக் கரங்கள் அனுபவித்த கொடிய வருத்தங்களைப் பார்த்து, நான் கைகளில் கட்டிக்கொண்ட பாவங்களைப் பொறுத்துக்கொள்ளும் சுவாமீ.
காலிரண்டிலும் பூசுகிற போது
சேசு கிறீஸ்துநாதரே! சிதறிப்போன ஆட்டுக்குட்டியாகிய என்னைத் தேட உழைத்தலைந்து வருத்தப்பட்டுச் சிலுவையில் இருப்பாணிகளால் ஊடுருவப்பட்ட தேவரீருடைய திருப் பாதங்கள் அனுபவித்த வேதனையைப் பார்த்து, நான் கால்களினால் கட்டிக்கொண்ட பாவங்களைப் பொறுத்துக்கொள்ளும் சுவாமீ.
(இதெல்லாம் முடிந்தபின் தனக்கு நல்ல மரணம் கிடைக்கும்படியாச் சேசுகிறீஸ்துநாதருடைய திரு மரணத்தைக் குறித்து 3-பர. 3-அருள். 3-திரி சொல்லி வேண்டிக்கொள்ளுகிறது.)