திருவருகை காலத்தின் இரண்டாம் ஞாயிறு செபம்

சர்வ வல்லமை பொருந்தியவரும் மகா இரக்கமுள்ளவருமான சர்வேசுரா, அகண்ட ஞானமும், அளவறுக்கப்படாத கிருபா கடாட்சமும் கொண்டிருக்கிற தீர்க்கதரிசியாகிய என் ஆண்டவரே, தேவரீர் உலக முடிவையும் அதற்கு முன் வரப் போகிற அடையாளங்களையும் எங்களுக்கு அறிவித்து அதற்கு எப்படி ஆயத்தம் செய்து கொள்ளவேண்டுமென்று கற்பித்தீரே. என் தேவனே எப்போது நீர் வருவீரென்று சந்தோஷத்தோடும் நடுநடுக்கத்தோடும் காத்துக் கொண்டிருக்கிறேன். அக்காலம் மின்னலைப் போல் திடீரென்று வருமென்று தேவரீர் திரவுளம்பற்றினீரே. வானங்கள் அதிர, மலைகள் நிலைகுலைய, பூமி அக்கினிக்கு இரையாகும் போது எம்மாத்திரம் பயங்கரம் உண்டாகும். மனிதர்கள் சிந்தனை சிதறி மடிவார்களே. இதை யோசித்துத் திகில் அடையாதவர்கள் யார்? புதிய வானத்திற்கும் புதிய பூமிக்கும் காத்திருக்கிற நாங்கள், வரப்போகிற பயங்கரங் களுக்குப் பயப்படாமல் உமது ஆறுதலினால் நம்பிக்கையோடு நிமிர்ந்து தலைகளை ஏறெடுத்து உமது வருகைக்குக் காத்திருக்கச் செய்தருளுஞ் சுவாமி. நாங்கள் பரலோக இராச்சியத்திற்காக இந்த நீசத்தனமான அற்ப உலகிலிருந்து மீட்கப்பட்டவர்களா யிருப்பதால் அக்காலத்தில் எங்களுடைய நம்பிக்கை எவ்வளவோ பெரியதாயிருக்கும். உயர்ந்த விலையில் இரட்சிக்கப்பட்ட நாங்கள் இதோ எங்கள் ஆண்டவர் வருகிறார் என்று சந்தோஷத்தால் அகமகிழ்ந்து உமது வருகைக்கு எதிர் பார்த்து நிற்போம். எங்கள் ஆத்தும மணவாளராகிய சேசுவே! நாங்கள் விவேகிகளான கன்னியர்களைப் போல் எங்கள் நற்கிரிகைகளாகிய தீவட்டிகளை ஆயத்தப்படுத்தி, உமக்கு எதிர்கொண்டு நித்திய கலியாண வீடாகிய மோட்சத்தில் நாங்கள் பிரவேசிக்கச் செய்தருளும். உத்தம நாயகனைப்போல் எப்போது வருவீரோ என்று காத்துக்கொண்டு விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகத்தோடு நாங்கள் இருக்கத் தயை செய்தருளும், சுவாமி.

இந்தப் பொல்லாத உலகத்தைவிட்டு நித்தியானந்த மோட்சத்தில் நாங்கள் பிரவேசிக்க எப்போதும் முஸ்திப்பாயிருக்கச் செய்தருளும் சுவாமீ. உப்புச் சிலையாய்ப்போன லோத்தின் மனைவியைப் போல், நான் துவேஷித்து விட்டுவிட்ட உலக பொய் வாழ்வைத் திரும்பிப் பார்ப்பதினால் மோசம் போகாதபடி செய்தருளும். நித்திய வெளிச்சத்திற்கும் அத்தியந்த செல்வத்திற்கும் காத்திருக்கிற நாங்கள் தேவரீர் எப்போது வருவீரோ என்று ஏங்கி நிற்கிறோம். எங்களுடைய விசுவாசம் குளிர்ந்து போனதால் விசுவாசத்தைத் தொடங்குகிறவரும் முடிக்கிறவருமாகிய எங்கள் ஆண்டவரே, எங்கள் விசுவாசத்தை உஷ்ணமுள்ளதாக்கியருளும். இந்த நாள் குறுகப்படாது போனால் மிகுந்த தின்மைகளைக் காட்டிய தேவனே, தின்மைகளின் நாட்களை குறுக்கி நற்கோது மைகளைப் போல் உமது களஞ்சியமாகிய மோட்சத்தில் எங்களைச் சேர்த்தருளும். அழுது நடந்து விதைகளைத் தெளித்து வருகிறோம். அது எங்கள் இருதயத்தில் நல்ல பயிராகும்படி தயை புரியம் சுவாமி. ஆமென்.

உலக இரட்சகர் பிரார்த்தனை சொல்லவும்....