ஆத்துமம் மாறாத கடவுளுக்கென்று படைக்கப்பட்டது. அது அவரைக் கண்டடைந்து அவரோடு ஒன்றித்து ஐக்கியப்பட்டால் திருப்தியடையும். வேறொன்றையும் தேடாது. நமது ஆத்துமம் இந்த சரீரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இப்படியிருக்க, பழக்கத்தால் வரும் எண்ணற்ற பாவங்களின் பளுவால், வழக்கமாய்ப் பாவத்தில் ஜீவிக்கும் பாவி இதை அதிக பாரமுள்ளதாக்குவான் என்றால் அவன் கதி என்ன ஆகும்? அவன் இரட்சிக்கப்படுவது மிகவும் அரிதாகும்.
கெட்ட பழக்கம் புத்தியைக் குருடாக்கும். பாவம் அதிகரிக்க, குருட்டுத்தனமும் அதிகரிக்கும். ஆத்துமம் கடவுளை விட்டு எவ்வளவு தூரம் விலகுமோ அவ்வளவுக்கு அது அதிகக் குருடாகும். இதன்பின் பாவிகள் மேலும் மேலும் பாவம் செய்வதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலாது. அவர்கள் பேசுவதும், நினைப்பதும் பாவத்தைப் பற்றியே! இதன் நிமித்தம் இவர்களுக்கு ஆரம்பத்தில் அச்சத்தையும், நடுக்கத்தையும் உண்டாக்கிய அந்தப் பாவம், தொடர்ந்து செய்யப்படுவதால் எந்த பயத்தையும் உண்டாக்குவதேயில்லை.
பாவப் பழக்கமுள்ளவன் பாவச் சமயமில்லாத வேளையில் கூட சந்தோஷம் ஒன்றும் அடையா திருந்தாலும் கெட்ட நினைவுகளை நினைத்துக் கொண்டேயிருப்பான். அவனது சம்மதமில்லாமலே பாவப் பழக்கம் அவனைத் தீமைகளுக்குள் இழுத்துக்கொண்டு போய்த் தள்ளும். அவன் நரகத்தில்தான் தன் கண்களைத் திறப்பான். அங்கே கண்ணைத் திறப்பதில் என்ன பயன்? தன் மூடத் தனத்தை அறிந்து அதிக கசப்போடும், துயரத்தோடும் அவன் கண்ணீர் சிந்த மட்டுமே அது உதவும்.
1. பாவப் பழக்கத்தால் வரும் இருதயக் கடினம்
பாவப் பழக்கம் இருதயத்தைக் கடினப்படுத்துகிறது. அதுவரை ஆண்டவர் அளித்த வரப் பிரசாதங்கள் மட்டில் நன்றியற்றவர்களாய் இருந்ததற்குத் தண்டனையாக அவர் தமது வரப்பிரசாதங் களைத் தராமல் நிறுத்தி விடுவதால் இருதயம் கல்லைப் போலக் கடினமாகி விடுகிறது. துர்ப்பழக்க மானது கொஞ்சம் கொஞ்சமாய் மனசாட்சியின் உறுத்தலையும் அழித்து விடும். ஆண்டவர் அவனைத் தண்டித்த போதிலும் அவன் மனந்திரும்பாதிருப்பது ஆச்சரியமல்ல. சில விசேஷ வரத்தால் ஒரு வேளை கடினப்பாவி மனந்திரும்பக்கூடும், என்றாலும் அது விதிவிலக்கு மட்டுமே!
நீ ஆன்ம குணமடைய விரும்பினால் அதற்கு மருந்து உண்டு. தேவ வரப்பிரசாதம் புதுமை செய்யும் என்று நீ எதிர்பார்க்காமல் தேவ உதவியைக் கொண்டு உன்னையே எதிர்த்துப் போ ஆபத்தான பாவச் சமயத்தினின்று விலகி ஓட வேண்டும்; தீய நண்பர்களை விலக்க வேண்டும்; சோதனை நேரத்தில் தேவ உதவியை மன்றாடி அதை வெல்ல வேண்டும். இது தவிர இதற்கேற்ற வழி களையும் நீ பயன்படுத்த வேண்டும். அதாவது அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்தல், தேவ நற்கருணை அடிக்கடி உட்கொள்ளுதல், தினமும் ஞான வாசகம்,தேவமாதாவின் மீது பக்தி, நீ திரும்ப பாவத்தில் விழாதபடி அவர்கள் உனக்கு உதவி செய்யும்படி அடிக்கடி அவர்களை மன்றாடுதல் ஆகியவை : ஆண்டவர் உன்னை அழைக்கும் சத்தத்தைக் கேள். நீ உன் ஆத்துமத்தில் செத்துக் கிடக்கிறாய். உன் பாவப் பழக்கமாகிய வாழ்வின் இருள் நிறைந்த கல்லறையில் நின்று வெளியே வா என்கிறார் அவர். தாமதமின்றி வெளியே வந்து. உன்னை ஆண்டவருக்கு ஒப்புக்கொடு. இதுவே உனக்குக் கடைசி அழைப்பாயிருக்கக் கூடுமென்று அஞ்சி நடுங்கும். இவற்றில் நிலையாயிருந்தால் பாவத்தினின்று விடுதலை அடைவாய்.
2. பாவிகளின் ஆன்மாக்கள் விக்கிரகங்களை வழிபடுபவை!
அஞ்ஞான தெய்வங்களைத் தொழுவதுதான் விக்கிரக வழிபாடு என்று அநேகர் நினைத்துக் கொண்டு, தாங்கள் ஒரே சர்வேசுரனை விசுவசித்து ஆராதிப்பதாக எண்ணுகிறார்கள். ஆனால் அர்ச். சின்னப்பர் பொருளாசையை விக்கிரக வழிபாடு என்றார் என்பதை நினைவில் வையுங்கள். ஒருவன்எதன் மீது இச்சை கொள்கிறானோ அதை ஆராதிக்கிறான். அது அவனுக்கு தெய்வமாகிறது. "இருத யத்தில் இருக்கும் ஓர் துர்க்குணம் பீடத்தின் மேலிருக்கும் ஓர் விக்கிரகம் போலாம்'' என்கிறது வேதாகமம். இதனாலேயே அர்ச். அவிலா தெரேசம்மாள்: " நீ இன்ப சுகங்களை நேசித்தால், அவை உனக்குத் தெய்வங்கள் ஆகின்றன'' என்கிறாள். மனிதன் ஆண்டவருக்கு மேலாக எதைத் தெரிந்து கொள்வானோ, அதை தெய்வமாக்குகிறான் என்று அர்ச். சிப்ரியன் கூறுகிறார். ஆத்துமம் பாவத்திற்குச் சம்மதிக்கும் போது அது ஆண்டவரைப் பார்த்து : 'ஆண்டவரே! என்னை விட்டு விலகிச் செல்லும்" என்கிறது. தீயவர்கள் ஆண்டவரைப் பார்த்து எங்களை விட்டுப் போய்விடும் என்றார்கள் (யோபு 21:14). இப்படி வார்த்தையினாலல்ல, தன் செயலாலேயே ஆத்துமம் இப்படி உரைக்கிறது" என்கிறார் அர்ச். கிரகோரியார். எனவே எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பதும், தன்னுடையவும் பிறருடையவும் ஆத்தும் இரட்சணியத்திற்குத் தேவைப்படும் அளவுக்கு மட்டும் உலகப் பொருட் களைப் பயன்படுத்துவதும் மீட்படைய அவசியம். தேவசிநேகமின்றி இரட்சணியமில்லை.
3. ஆத்துமத்தை இருளடையச் செய்யும் மோக பாவம்!
மோக பாவியின் ஆத்துமத்தில் நரக இருள் அடர்ந்திருக்கிறது என்று மன்ரேசா கூறுகிறது. இதன் காரணமாக, அவன் தன் பாவத்தின் கனாகனத்தைக் காண முடியாதவனாக இருப்பான். அவனது ஆத்துமத்தின் கண்களாகிய மனதையும் புத்தியையும் இருள் சூழ்ந்திருப்பதால், தான் இருக்கும் பயங்கர ஆன்ம நிலையை அவன் உணராதிருப்பான். எந்த விதமான மன உறுத்தலுமின்றி அவன் தன் பாவத்தைத் தண்ணீரைப் போலப் பருகுவான்; பெரும்பாலும் மோக பாவி வழக்கப் பாவத்தில் சிக்கியவனாக இருப்பான்; அதிலிருந்து வெளியே வரவிரும்ப மாட்டான். அப்படியே விரும்பி, நல்ல பிரதிக்கினை செய்தாலும், முதல் சோதனையில் மிக எளிதாகப் பாவத்தில் தவறி விழுவான்.
மோக பாவி பெரும்பாலும் பகிரங்கப் பாவியாக இருந்தாலும், தன் பாவத்தைக் குறித்து வெட்கப் படமாட்டான்; உண்மையில் தங்கள் மோக பாவத்தைக் குறித்துப் பெருமை பாராட்டும் பாவிகளும் கூட ஏராளமாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் கடமைகளில் தவறுவார்கள்; தங்கள் மனைவி, குழந்தைகளைக் கைவிடுவார்கள். உண்மையில் இது கடவுளுக்கு மிக அருவருப்பூட்டும் பாவமாகும்.
மோக பாவி உண்மையாகவே மனந்திரும்ப விரும்பினால், அவன் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்; அடிக்கடி, அல்லது குறைந்தபட்சம் ஞாயிறன்றாவது முழுப் பூசை கண்டு நன்மை வாங்குவதுடன் தினமும் பல முறை ஞான நன்மை அருந்தும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும்; தியானத்திற்கும் ஜெபமாலைக்கும் மிகுந்த முக்கியத்துவம் தர வேண்டும்; பாவ சந்தர்ப்பங்களைக் மிகக் கண்டிப்பாக விலக்கியே தீர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளின் வரப்பிர சாதத்தையும், அமலோற்பவத் தாயாரின் உதவியையும் இடைவிடாமல் இரந்து மன்றாடுவதில் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும். கற்பென்னும் புண்ணியத்தை ஏக்கத்தோடு தேடவும், அதை நேசிக்கவும் வேண்டும். உங்கள் பாவம் புரையோடிப் போனதாக இருந்தாலும், அவநம்பிக்கைக்கு இடம் தராதீர்கள்; ஏனெனில் உங்கள் பாவத்தை விட, தேவசிநேகம் எவ்வளவோ மேலானது! எனவே கடவுளை இனி பாவத்தால் நோகச் செய்வதில்லை என்னும் பிரதிக்கினையோடு உங்கள் பாவத்தை எதிர்த்துப் போராடுவீர்கள் என்றால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் ! தாழ்ச்சியோடும், நொறுங்கிய உள்ளத்தோடும் தம்மைத் தேடும் ஆத்துமங்களை ஆண்டவர் கைவிடுவதில்லை, தேவ அன்னையும் அவர்களைப் புறக்கணிப்பதில்லை! மோட்சத்தில் தேவதூதர்களும், அர்ச்சியசிஷ்டவர்களும், பூமியில் குருக்களும், துறவறத்தாரும், நல்ல மனிதர்களும் அவர்களுக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.
4. இறுதித் தீர்ப்பு ஒருபோதும் மாற்றப்பட இயலாதது!
ஒரு முறை பிறந்து, ஒரு முறை இறக்கவும், ஒரே முறையில் நித்தியத்திற்கும் தீர்ப்பிடப்படவும் நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம். இந்த இறுதித் தீர்ப்பு ஒருபோதும் மாற்றப்பட இயலாதது என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொண்டிருக்க வேண்டும். இங்கே மறு மதிப்பீடு என்பது இல்லை! ஒவ்வொரு நாளும் மனதுக்குள் உன் நித்திய நடுவருக்கு முன்பாக உன்னை நிறுத்தி, உன் செயல்களுக் கேற்ப அவர் உன்னைத் தீர்ப்பிடுவதாக ரூபிகரம் செய்! உன்னை இழுத்துக்கொண்டு போகப் பசாசுக்கள் அக்கினியாலான சங்கிலிகளோடு காத்திருப்பதை நினைத்துப் பார்! நீ ஏன் அஞ்சி நடுங்க வேண்டும் என்பது புரியும். நீதியின் தேவனோ தமது பக்திச் சுவாலகர்களிடமும் குற்றங் காண்கிறவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உன் தீர்வையின் நேரத்தில் நம்பிக்கையோடும், தைரியத்தோடும் அவர் முன் நிற்க நீ விரும்பினால், இப்போதே உன் ஆத்துமத்தைப் பாவசங்கீர்த்தன் தேவத்திரவிய அனுமா னத்தால் சுத்திகரித்து, தேவ நற்கருணையும், திவ்விய பலிபூசையும், ஜெபமாலையும், இவை போன்ற சகல தேவ காரியங்களும் கொண்டு வரும் வரப்பிரசாதங்களையும், பேறுபலன்களையும் கொண்டு அதை அலங்கரித்து வைத்திரு. இதையே எப்போதும் உன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிரு.