குரு அப்பத்தைக் கையில் ஏந்திக் காணிக்கை கொடுக்கிறபொழுது

மட்டற்ற வல்லமையையும் அளவற்ற பரிசுத்தத் தன்மையையும் கொண்டிருக்கிற நித்திய சர்வேசுரா! நான் உமது திருச் சமூகத்திலே நிற்க எவ்வளவு அபாத்திரவனாயிருந்தாலும், என்னுடைய இரட்சகராகிய சேசுகிறீஸ்துவானவர் இந்தப் பலியை உண்டு பண்ணின போதும், எனக்காக இந்தத் தருணத்திலும், அவருக்குள்ள கருத்துடனே என் கருத்தையும் ஒன்றாகக் கூட்டிக் குருவின் கைங்கரியத்தைக் கொண்டு உமக்கு இந்தப் பலியை ஒப்புக் கொடுக்கிறேன். மேலும் அடியேன் மீதும், சர்வ படைப்பு களின் பேரிலும் தேவரீருக்குள்ள மேலான கர்த்தத்துவத்தை அணிந்து நமஸ்கரிக்கவும் என் பாவங்களுக்குப் பொறுத்தல் அடையவும், எனக்கு நீர் செய்த எண்ணிறந்த உபகாரங்களுக் கெல்லாம் நன்றியறிந்த தோத்திரமாகவும் தேவரீருக்கு இந்தப்பலியை ஒப்புக்கொடுக்கிறேன், சுவாமீ.

கடைசியாய் என் சர்வேசுரா! சகல பாவப் பொறுத்தலுக்காகப் பலியான வருமாய் எல்லாவற்றிலும் பரிசுத்தருமாயிருக்கிற உமது ஏக சுதனுடைய புண்ணியங்களைக் குறித்து, பாவிகளுக்காகத் தந்தருளப்பட்ட இரட்சணியத்தின் இஷ்டப்பிரசாதப் பலன்களை அடியேன் என் தந்தை தாய் உறவின்முறையார் உபகாரிகள் சிநேகிதர்கள் பகைவர்கள் எல்லோரும் அடையும்படிக்கு, இந்தத் திவ்விய பலியைத் தேவரீருக்கு ஒப்புக் கொடுக்கிறேன். பின்னும் தேவரீருக்கு ஒப்புக் கொடுக்கிற இந்தப் பூசையின் பலனை, அர்ச்சியசிஷ்ட பாப்பு மேற்றிராணிமார் குருக்கள் இராசாக்கள் பிரபுக்கள் சகலமான கிறீஸ்துவர்களும் அடையவுஞ் செய்தருளும். என் ஆண்டவரே! உம்முடைய திருக் குமாரன் பேறுபெற்ற பலன் களைப் பார்த்து உத்திரிக்கிற ஸ்தலத்திலிருக்கிற ஆத்துமாக்கள் மேல் இறங்கி அவர்களுக்கு இளைப்பாற்றியும் பிரகாசமும் சமாதானமும் உள்ள இடத்தைக் கட்டளையிட்டருளும். என் சர்வேசுரா! உமது சத்துராதிகளையும் என் விரோதிகளையும் மறந்து விடாதேயும். புறவினத்தார் பதிதர் பொல்லாத கிறீஸ்துவர்கள் பேரில் இரக்கமாயிரும். என்னை உபத்திரவப் படுத்துகிறவர்களை ஆசீர்வதித்தருளும். அவர்கள் எனக்குச் செய்கிற குற்றங்களை நான் நல்ல மனதோடு பொறுத்துக் கொள்ளுகிறது போல, அடியேன் தேவரீருக்குச் செய்த குற்றங்கள் எல்லாவற்றையும் பொறுத்தருளும்.