என் சர்வேசுரா! இனி நான் நடக்க வேண்டிய வழியை அப்போஸ்தலரும் தீர்க்கதரிசிகளும் அல்ல, உம்முடைய ஏக சுதன் தானே எனக்குப் படிப்பிப்பவர். அவருடைய திரு வசனங்களைத் தானே கேட்கப் போகிறேன். ஆனால் ஐயையோ! என் ஆண்டவராகிய சேசுவே! இந்த வசனங்கள் உமது திரு வசனங்கள் என்று விசிவசித்தும், என் விசுவாசத்திற்கு ஒத்தப் பிரகாரம் நடவாமல் போனேனாகில், எனக்கு என்ன பிரயோசனம்? உமது திருச் சமூகத்தில் நான் தீர்வைக்கு வரும் பொழுது, என்னிடத்தில் தேவ சிநேகமும் உத்தம கிரியையும் இல்லாமல் விசுவாசம் மாத்திரம் இருந்தால் எனக்கு வரும் பலன் என்ன? நான் விசுவசித்தாலும் விசுவசியாதவனைப் போலவும் ஒன்றில் உமது சுவிசேஷத்திற்கு விரோதமான மற்றொன்றை விசுவசிக்கிறவனைப் போலவும் நடந்து வருகிறேன். என் சர்வேசுரா! உமது போதனைக்கும் எனது நடத்தைக்கும் உண்டாயிருக்கிற மாறாத விரோதத்திற்குத் தக்கப்படி என்னைத் தீர்வை இடாதேயும். என் ஆண்டவரே! நான் முழு மனதோடு உமது சத்தியத்தை விசுவசிக்கிறேன். என் விசுவாசத்திற்கு ஒத்த வண்ணம் நான் நடக்க எனக்கு வேண்டிய தைரியமும் பலமும் கட்டளை செய்தருளும். ஆண்டவரே அதனால் உமக்கே ஸ்துதியும் தோத்திரமும் உண்டாகுக.