ஞானஸ்நானம் பெறுகையில் கொடுத்த வாக்குத்தத்தத்தின் நிபந்தனைகளைப் புதுப்பிக்கச் செபம்
ஓ என் ஆண்டவரே! என் பிதாவே, உமது திவ்விய சமூகத்திற்கு முன்பாக தாழ்ச்சியோடு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கிறேன். உமது இராஜரீக நீதியையும், என்றும் கெடாத தயையையும் பூசிக்கிறேன். ஞானஸ்நானத்தால் உமது பிள்ளைகளோடு நான் மேன்மைப்படுத்தப் பட்டுக் கிறீஸ்துவனென்று கீர்த்திப் பிரதாபத்துடன் நான் உயிர்ப்பிக்கப்பட்டுப் பரலோக பேரின்ப பாக்கியத்தைச் சாஸ்வதகாலம் நான் அனுபவிக்கச் சுதந்திரவாளனாகியும், உமது சகல நன்மைகளுக்கும் நான் நன்றிக் கெட்ட விதமாய் நடந்துகொண்டதை நினைத்து நடுநடுங்குகிறேன். நான் பசாசின் ஆராதனையையும், மண்ணாசையையும், சரீர இச்சையையும் வெறுத்து விட்டுவிட்டேன் என்று வாக்குத்தத்தம் செய்தபோது, என் பேரில் பொழியப்பட்ட இரத்தத்தின் பலனையும், நான் செய்யவேண்டிய கடமைகளையும் இன்ன தென்று கண்டறியப் புத்தியற்றவனாயிருந்தேன். ஆனால் இப்போது அவைகளின் பயனையும் பலனையும் அறிந்துக் கொள்ளப் போதுமான அறிவு எனக்கு இருக்கின்றது. என்னை நீர் ஞானஸ்நானத் தண்ணீரண்டைக்குச் சிந்தாத்திரையாகக் கொண்டு வந்து சேர்த்ததற்கு உம்மைப் புகழ்ந்து துதிக்கிறேன்.
ஓ என் ஆண்டவரே! நான் ஞானஸ்நானம் பெறும்போது எனக்கு தரித்த மாசற்ற ஆடையை எத்தனையோ முறை கறை படுத்தினேன் என்றும், செய்த வாக்குத்தத்தத்தை எத்தனையோ முறை மீறினேன் என்றும் நீர் அறிந்திருக்கிறீர் அல்லவோ? ஞானஸ்நானத்தால் மறுபிறப்பையடைய என்னை ஞானஸ்நானத் தொட்டியருகில் கொண்டுவந்தபோது, நீர் என் இரட்சணியத்தின் பொருட்டுத் தந்த வார்த்தைப்பாடுகளின் நிபந்தனைகளையும், பரிசுத்தக் கத்தோலிக்கத் திருச்சபையின் கட்டளைகளையும் மீறினதற்காக நான் படுகிற உத்தம மனஸ்தாபத்தைப் பார்த்து வருகிறீரே. நான் உறுதியாய் பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த சர்வத்திற்கும் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை மிகுந்த பயபக்தியாக விசுவசிக்கிறேன். மனுவுருவெடுத்து எங்களுக்காகப் பாடுபட்ட சர்வேசுரனுடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் சேசு கிறிஸ்துவை மிகுந்த பயபக்தியுடன் விசுவசிக்கிறேன். இஸ்பிரீத்து சாந்துவை மிகுந்த பயபக்தியாக விசுவசிக்கிறேன். பரிசுத்த - கத்தோலிக்குத் திருச்சபையை விசுவசிக்கிறேன். சகல அர்ச்சியசிஷ்டவர்களின் அன்னியோன்ய ஐக்கியத்தை விசுவசிக்கிறேன். பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன். சகல சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். உம்மால் சபிக்கப்பட்ட இவ்வுலகத்தையும், அதன் ஆடம்பரத்தையும் பெருமை சிலாக்கியத்தையும், வீண் மகத்துவங்களையும் அருவருத்துத் தள்ளுகிறேன். எனக்குத் தரிக்கப்பட்ட ஆடையை சேசு கிறீஸ்துநாதரின் நீதிஸ்தலத்திற்கு முன் வந்து சேருகிறவரை கறைபட ஒட்டாமல் காக்கவும், உயிரை முதலாய்ப் பலி கொடுக்கவேண்டுமானால் கொடுத்து என் குற்றங்களையுங் குறைகளையும் சீர்திருத்திக்கொள்ளவும் வரம் தந்தருளும். கெட்டியான மனத்திடங்கொண்டு என் சரீரத்தையும், அதன் சோதனைகளையும் அருவருத்துத் தள்ளிக் கொண்டு வருவேன் என்பதற்கு ஐயமில்லை . ஓ என் நல்ல சர்வேசுரா! உம்மை நான் நேசிப்பதற்கு முன்பாகவே என்னை நேசித்திருக்கிறீரே. நான் பக்தியின் சுவாலையை அடைய உம்மைப் பார்த்து மன்றாட அபாத்திரனாயிருக்கையில் சேசுகிறீஸ்துநாதரின் பரிபூரணப் பலனை என் இருதயத்தில் சம்பூரணமாய் நிறைப்பித்தீரே. ஆகையால் இப்போது அடியேன் பேரில் கிருபை கூர்ந்து அடியேன் ஞானஸ்நானம் பெறுகையில் செய்த உடன் படிக்கையைக் குறையற நிறைவேற்றத்தக்க வரப்பிரசாதத்தை எனக்குக் கட்டளையிட்டருளும். ஞானஸ்நானத்தால் நான் அடைந்த பரிசுத்த வரப்பிரசாதத்தை என் இருதயத்தில் பெருக்கியருளும். உம்மோடும், இஸ்பிரீத்து சாந்துவோடும் அனவரதகாலம் சீவித்துப் பரிபாலனம் செய்து வரும் ஏக சர்வேசுரனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுகிறீஸ்துநாதரின் சொல்லிமுடியாத தயாளத்தின் பலன் சதாகாலம் எனக்குப் பயன்படும்படி விசுவாச நன்மாதிரிகையின் முறைமையை எனக்குக் கற்பித்தருளும், ஆமென்.