சிலுவையில் தொங்கும் செம்மறியே - என்னைச்
சிலையென நிறுத்தும் அன்புருவே
கசையடி குதறிய உமைக் காண - மனம்
கசிந்திடக் கண்ணீர் பெருகிடுதே
1. சாட்டையால் உமதெழில் மலருடலை - ஒரு
சாலென எண்ணி உழுதனரோ
வேட்டையில் விழுந்த மானெனவே உம்மை
வீணர்கள் எண்ணிக் கீறினரோ
2. கூரிய முள்முடியால் தலையில் - இன்று
ஏறின துன்பம் எவ்வளவோ
யாருமே இல்லையோ நண்பரென உமக்(கு)
ஆறுதல் தந்து தேற்றிடவே
3. அணைத்திட விரித்த கரங்களிலே - கொடும்
ஆணியே அமைவாய் நுழைந்ததுவோ
தேடிய திருவடி துளைபடவே - அது
திரண்டெழு குருதியில் குளித்ததுவோ