ஓ பிதாவே! நீர் அடியேன் பேரில் வைத்திருக்கிற உமது சித்தத்தின் நோக்கத்தையும், என் ஆத்தும இரட்சணியத்துக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிற உமது உத்தம விருப்பத்தையும் தெரிவியும். அடியேன் சுவிசேஷத்தில் சொல்லியிருக்கிற வாலிபனைப் போல் இரட்சிக்கப்பட என்ன செய்யவேண்டுமென்று கேட்கிறேன். உமது திவ்விய ஒளியை எனக்குக் கட்டளையிட்டருள உம்மை மன்றாடுகிறேன். சீவியத்தின் அநேக நிலைமைகள் என் முன் இருக்கிறபடியால், எதைப் பின்பற்றுகிறதென்று கண்டுணராமல் இருமன முற்று, உமது திவ்விய கட்டளை வருகிறவரையிலும் எதிர்பார்த்திருக்கிறேன். ஓ ஆண்டவரே! உமக்கு மிகுந்த தாழ்ச்சியோடு தடையின்றி என்னை முழுதும் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன்.
ஓ பிதாவே! அடியேன் உமது திரு ஞான கற்பனைகளை மீறாமலும், எனது பிரதிக்கினைக்கு உண்மையற்றவனாயிராமலும், சிருஷ்டிகருடைய சித்தத்துக்கு விரோதமாய் உலக வீணாசையில் உழலாமலும் நடக்க அநுக்கிரகம் செய்தருளும். ஊழியக்காரன் நடக்கவேண்டிய வழியைத் தெரிவிப்பது ஏசமானின் கடமை யாகையால், உமக்குப் பிரியமான பாதையில் அடியேன் நடந்து உமக்குப் பணிவிடை புரிய எனக்குக் கற்பித்தருளும். என் பகுதி உமது திருக்கரங்களில் இருக்கின்றதே. ஆகையால் நீர் என்னை நடப்பிக்காவிடில் நானே என் நடக்கைகளுக்கு மத்தியஸ்தனாகி எனக்கு நேரிடும் சோதனைகளைக் கண்டுபிடிக்கப் பார்வை போதாமல் குருடனாகியிருப்பேனல்லோ . நான் உமது கட்டளைகளுக்கு அமைய தடை செய்யமாட்டேன். பிதாவே, நீர் சாமுவேல் என்னும் வாலிபனோடு சம்பாஷித்தது போல என் ஆத்துமத்தோடும் சம்பாஷித்தருளும். பிதாவே, அடியேன் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிறபடியால் அடியேனுடன் பேசியருளும். பிதாவே, என் மீதி நாட்களுக்காக என்னை உமக்குப் பலியாக்கிக்கொண்டு உமது மாட்சிமைக்கு சித்தமாயிருக்கிறபடி நான் உமக்காகவே பலியாக உமது திருப் பாதாரவிந்தத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறேன்.
ஓ என் ஆண்டவரே! என் தாய் தந்தையருடைய அன்பை ஆண்டு, அவர்களை உமது நித்திய ஞானத்தின் கருத்துக்கிசைந்த விதமாய் நடத்தத் தயை செய்தருளும். பிதாவே, சத்தியத்தின் உப்பரிகையே, உம்மோடு நான் கலந்து பேச மிகவாய் நானும் ஆசிக்கிறேன். அவர்களும் உமது நிபந்தனைகளுக்கு உகந்த மேரையாய்க் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளக் கட்டளை யிட்டருளும், சுவாமீ, ஆமென்.