மரணத் தறுவாயில் தேவதிரவிய அநுமானங்களைப் பெறும்படி செபம்

எவ்வித பாவ தோஷங்களையும் நிவர்த்தியாக்கவும், எல்லா ஆத்துமங்களைச் சுத்திசெய்யவும், சகல மனுமக்களும் மோட்சத்தில் பிரவேசிக்கப் பாத்திரவான்களாகவும், பச்சாதாபம் என்னும் தேவதிரவிய அநுமானத்தை ஸ்தாபிக்கத் திருவுளமான சர்வேசுரா! நாங்கள் அவஸ்தைப் படும் நேரத்திலே நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து பாவப்பொறுத்தல் அடையும் பொருட்டு அநுக்கிரகம் செய்தருளும். - 1பர. அருள். திரி.

நோயாளிகளுக்கு ஆறுதலாகவும் திடனாகவும் தேற்றர வாகவும் நோயில் பூசுதலென்கிற தேவதிரவிய அநுமானத்தை ஸ்தாபிக்கத் திருவுளமான மதுர சேசுவே, நாங்கள் வியாதியாய் விழுந்து அவஸ்தையாய்க் கொடிய பசாசோடு கடைசியுத்தம் செய்து, நித்திய மோட்சத்துக்காவது நித்திய நரகத்துக்காவது போகும் ஆபத்திலிருக்கும்போது எங்களுக்கு இரங்கி நாங்கள் தக்க ஆயத்தத்தோடு அவஸ்தைப் பூசுதல் பெறும்பொருட்டு கிருபை செய்தருளும். - ஒரு பர. அருள். திரி.

இவ்வுலகத்திலுள்ள எங்கள் சுற்றத்தார் சிநேகிதர் முதலான சகலரும் எங்களுக்கு ஒத்தாசை செய்யக்கூடாமல் எங்களைக் கைவிட்டகலும்போது எங்களை ஒருபோதும் கைவிடாத சேசுவே! எவ்வித ஆராதனைக்குரிய உமது திவ்விய இருதயத்தைக் கொண்டு உம்மைப் புகழ்ந்து நமஸ்காரம் செய்கிறோம். தேவரீர் தேவநற்கருணையிலே மெய்யாகவே எழுந்தருளி வந்து எங்களுக்குப் போசனமாகவும் துணையாகவும் இருக்கச் சித்தமானதைப் பற்றி உம்மை வாழ்த்தி ஆராதனை செய்கிறோம். நாங்கள் வியாதி யினால் மெலிந்து, கஸ்தியினால் சோர்ந்து, சோதனையினால் கலங்கி, மனுஷர் உதவியற்றுக் கிடக்கும் நேரத்தில் தேவரீர் எங்களுடைய பாவங்களையும் ஒழுங்கீனத்தையும் பாராமல், உமது திவ்விய இருதயத்தில் பற்றி எரியும் மட்டில்லாத பட்சத்தை நினைத்து மரிக்கிற எங்களுக்கு தஞ்சமாகவும், இரட்சிப்பாகவும், நித்திய பாக்கியத்துக்குப் பிணையாகவும் சற்பிரசாதமான தேவநற்கருணையை பயபக்தியோடு வாங்கும்பொருட்டுத் தயை செய்தருள வேண்டுமென்று உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம் சுவாமீ, ஆமென்.