உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக

கருணாம்பர சர்வேசுரா! அடியேன் எனது வாழ்நாட்களில் தேவரீருடைய சித்தத்தை நிறைவேற்றாதிருந்தேனே, சற்றாகிலும் என் இறுதி காலத்தில் அதை நிறைவேற்ற வேண்டுமென்று விரும்புகிறேன். அடியேன் எப்பொழுது சாகவேண்டுமோ, இவ்வுலகில் இன்னும் தவம் செய்ய வேண்டுமோ, நான் அனுபவிக்கிற நோக்காடுகளை இன்னும் அநேக நாள் அனுபவிக்க வேண்டுமோ, உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு காலம் வேதனைப்பட வேண்டுமோ, எல்லாவற்றிலும் தேவரீருடைய சித்தத்தின்படியே ஆகட்டும். பிதாவே எல்லாவற்றிலும் தேவரீருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிய விரும்புகிறேன். தேவரீருடைய சித்தமே அடியேனுக்குப் பாக்கியமும் மகிமையும் சந்தோஷமுமாகும். இந்தப் பரிசுத்த சித்தத்தின் படியே அடியேன் என்றென்றைக்கும் உம்மை ஸ்துதிக்கத்தக்கதாகத் தேவரீரிடத்தில் அடியேனைச் சேர்த்துக் கொள்ளத் திருவுளமாக வேண்டுமென்று மன்றாடுகிறேன்.