ஓ பரிசுத்த (பெயரைச் சொல்லவும்) என்னும் பெயர் கொண்டவரே, அளவில்லாத சகல நன்மையால் இன்றையதினம் உமக்குக் கட்டளையிட்டிருக்கும் மகிமைக்குத் தோத்திரமாக நான் என் ஆத்துமத்தின் முழு பலத்தோடு உம்மைப் புகழ்ந்து ஸ்துதித்து நமஸ்கரித்து வாழ்த்துகிறேன். நீர் நித்திய பாக்கியத்தைப் பெற்றுச் சர்வேசுரனுடைய சந்நிதானத்தின் முன் சம்மனசுகளால் கொண்டுபோய் விடப்பட்ட மாத்திரத்தில், நீர் அடைந்த சந்தோஷ நன்மையின் பெருக்கை நினைவுகூரும்படி உம்மை மன்றாடுகிறேன். ஆ, மகா பரிசுத்த அர்ச்சியசிஷ்டவரே! சர்வேசுரன் தமது திருக் கரத்தால் தழுவி உம்மை மோட்சராச்சியத்தின் சிங்காசனத்தில் உட்காரவைத்து முடியை உமது சிரசில் சூட்டும்போது, நீர் அனுபவித்த சந்தோஷத்தையும் மகிமையையும் நினைத்தருளும். மகிமை பொருந்திய சர்வேசுரன் உமக்களித்த சதாகால இரக்கத்துக்கும் உபகாரத்துக்கும் தோத்திரமாகவும், சர்வேசுரன் உமது பேரில் வைத்த சொல்லிமுடியாத மதுர தயாளத்தின் பெருக்கத்துக்குத் தோத்திரமாகவும் அவருடைய எண்ணிறந்த நன்மையைத் துதித்துப் புகழ்ந்து இறைஞ்சுகிறேன். என்றும் அழியாத அன்பின் நேசத்தில் நானும் கட்டுண்டு பந்தனப்பட வெகுவாய் இச்சிக்கிறேன். சகல நன்மைகளுக்கும் பொக்கிஷமாகிய சேசுவின் இனிய திரு இருதயத்தையும், அவர் பூலோகத்திலிருக் கையில் காண்பித்த இரட்சிப்பையும் இப்பொழுது பரலோகத்தில் காண்பித்துவரும் நேசத்தையும் தியானித்து அகமகிழ்கிறேன். கடைசியாய் உம்முடைய பரிசுத்த வேண்டுதலால் நான் இரட்சணியம் அடைவேனென்று வெகு உறுதியாய் நம்புகிறேன். என் பயங்கரமான மரணத்தருவாயில் நித்திய உத்தம கடவுளுக்குப் பிரியப்பட்டவனாயிருக்க நான் செய்திருக்கும் எண்ணிறந்த பாவங்களுக்கும் தேவ இரண்டகங்களுக்கும் முன்னதாகவே பாவ விமோசனமடையச் செய்தருள உம்மைப் பார்த்து மன்றாடுகிறேன், ஆமென்.