அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே - மற்றதும்
அடியேனாகிய (பெயர்) எனக்குச் சாவு வருமென்று நிச்சயமாய் அறிந்து அது எப்பொழுதோ, எங்கேயோ, எப்படியோ நேரிடுமென்று அறியாதிருப்பதினாலே, நான் இப்போது சரீர சவுக்கியமாயும், புத்தித் தெளிவாயும் இருக்கையில் தானே என்னுடைய ஞான மரணசாசனத்தைச் செய்துகொள்ளுகிறேன். அதாவது, உரோமாபுரியின் பொதுவாயிருக்கிற திருச்சபைக்குப் புறம்பாயிருக்கிறவர்களுக்கு ஈடேற்றம் இல்லை என்று அறிந்து, அத்திருச்சபையின் ஞானப் பிள்ளைகளுக்குள்ளே நானும் ஒரு பிள்ளையாக சாக விரும்புகிறேன் என்று பிரசித்தமாய்ச் சொல்லுகிறேன். அத்திருச்சபை விசுவசித்து படிப்பிக்கிறதெல்லாம் சத்திய சொரூபியாய் இருக்கிற சர்வேசுரன் திருவுளம்பற்றின படியினாலே நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். அத்திருச்சபை யில் செய்யப்படுகிற சடங்குகள், முறைமைகள் எல்லாம் நானும் நல்லதென்று ஏற்றுக் கொள்ளுகிறேன். அத்திருச்சபை விலக்குகிற யாவையும் நானும் ஆகாதென்று அகற்றுகிறேன்.
பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன், சுதனாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன், இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரைைன விசுவசிக்கிறேன், பிதாச் சுதன் இஸ்பிரீத்துசாந்து வென்ற ஆள்வகையில் மூவராயிருந்தாலும் தேவ சுபாவத்தில் சுவாமி ஒருவராயிருக்கிறார் என்று விசுவசிக்கிறேன், பிதாவாகிய சர்வேசுரன் பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்தார் என்றும், நான் அவரை அறிந்து வணங்கிச் சிநேகித்து ஊழியம் செய்ய என்னைச் சிருஷ்டித்தார் என்றும் விசுவசிக்கிறேன், அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் சேசுகிறீஸ்து மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனுஷனும் ஒன்றாயிருக்கிறார் என்று விசுவசிக்கிறேன், இவர் சர்வேசுரனாகிய மட்டும் பிதாவோடும் நித்தியமாயிருக்கிறார் என்றும் விசுவசிக்கிறேன், இவர் மனுஷனாகியமட்டும் இஸ்பிரீத்து சாந்துவினாலே கர்ப்பமாய் உற்பவித்து அர்ச். கன்னிமரியாளிடத்திலிருந்து பிறந்து நம்மைத் தம்முடைய சத்திய வேதத்தினாலே படிப்பித்து அடைந்த திருமரணத்தினாலே இரட்சித்து பேறுபலிகளினால் சிறப்பித்து இஷ்டப்பிரசாதத்தினாலே அலங்கரித்து மோட்ச பேரின்ப இராச்சியத்தில் என்றென்றைக்கும் நம்மை வாழ்விக்கத்தக்கதாகப் பாடுபட்டார் என்றும் விசுவசிக்கிறேன், இவர் மரித்தவர்கள் இடத்திலிருந்து மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தருளினார் என்றும் பரமண்டலங்களிலே ஏறிச் சர்வத்துக்கும் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார் என்றும் அவ்விடத்திலிருந்து சீவியர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நடுத்தீர்க்கவருவார் என்றும் விசுவசிக்கிறேன். இந்தச் சத்தியங்களை ஒப்பிக்கத்தக்கதாக என்னுடைய உயிரை இழக்க வேண்டு மானாலும் தேவ வரப்பிரசாதத்தை நம்பிச் சந்தோஷமாய் இழக்கத் துணிகிறேன்.
சர்வேசுரன் எனக்கு எண்ணிறந்த உபகாரங்களைச் செய்து என்னை அநேக பொல்லாப்புகளிலிருந்து இரட்சித்தார் என்கிற தினாலே நான் நன்றியறிந்த மனதோடே எல்லாவற்றையும் பார்க்க அவரை நேசிக்க வேண்டுமென்கிற கடன் என் பேரிலே சுமத்தப்பட்டுள்ளதென்று ஒத்துக்கொள்ளுகிறேன். இதனாலே அவரை முழுமனதோடே நேசித்து வணங்கி ஆராதிக்கிறேன். மீளவும் சீவிய நாளெல்லாம் நான் அவரை புறக்கணித்து விரோதித்து அவருக்கு ஏற்காத துரோகங்களைச் செய்திருக்கிற தினிமித்தமாக, அவருடைய மட்டில்லாத கர்த்தத்துவத்தை விளக்கி, அவருடைய மகத்துவத்துக்கும் பிரதாபத்துக்கும் பாதகாணிக்கை யாக என் உயிரை இழக்கச் சம்மதிக்கிறேன். நான் செய்த பாவ தோஷத்துக்குப் பரிகாரமாகவும், அவருடைய நீதிக்கு என் கீழ்ப் படிதலைக் காண்பிக்கவும், என் பிராணனைவிடச் சந்தோஷ மாயிருக்கிறேன். என்னை இரட்சிக்கத் தக்கதாகச் சேசுநாதசுவாமி சிலுவையிலே அடைந்த கடின மரணத்தைக் கண்டுபாவிக்கவும், சர்வேசுரனுடைய தரிசனத்தை அடையவும் என் சீவியத்தை அளிக்கத் துணிகிறேன்.
என் சர்வேசுரா, என் ஆண்டவரே, சர்வ ஆராதனைக்குரிய கர்த்தாவே! நான் தேவரீருடைய பிரதாபமுள்ள சந்நிதானத்திலே சாஷ்டாங்கமாய் விழுந்தழுகிறதைக் கிருபையாய் நோக்கியருளும். நான் தேவரீருக்குப் பொருந்தாத துரோகங்களைச் செய்யும்போது மகா அநீதமான காரியத்தைச் செய்தேனென்றும், அதற்கு எனக்கு ஆயிரம் சாவும் பதினாயிரம் நரகமும் போதாதென்றும் ஒத்துக் கொள்ளுகிறேன். ஆகையால் தேவரீர் என்மட்டில் இவ்வுலகிலும், அவ்வுலகிலும் என்ன தீர்மானிப்பீரோ, அதற்கு முழுதும் சம்மதிக் கிறேன். தேவரீருடைய நீச அடிமையாகிய நான் நரகத்துக்குப் போவேனேயாகில், இந்த அகோர பொல்லாப்பு என் துஷ்டத்தனத் தாலும், ஆங்காரத்தாலும், பொல்லாத குணத்தாலும் நேரிடுகிற தேயல்லாமல், தேவரீருடைய தயவின் குறைவல்லவென்றும் ஒத்துக்கொள்ளுகிறேன். அடியேனுக்குத் தேவரீர் இடப்போகிற தீர்வை என்ன தீர்வையாயிருந்தாலும் நீதியுள்ள தீர்வை அதென்று ஏற்றுக்கொள்ளுகிறேன், சுவாமி.
அடியேன் கட்டிக்கொண்ட பாவங்களின் கொடுமையையும் விரோதத்தையும் பார்க்கும்போது, நான் நரகத்தில் தள்ளப்பட வேண்டியதாயிருந்தாலும், தேவரீருடைய அளவிறந்த கிருபையை நம்பித் தேவரீருக்கு உகந்த பிள்ளையாக, சேசுநாத சுவாமி என்னை இரட்சிக்கத் தக்கதாகச் சிந்தின திருக் கண்ணீரையும் திவ்விய இரத்தத்தையும் பார்த்து அடியேனை நரகத்தில் தள்ளாமல் பரம இராச்சியத்தில் சேர்த்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். சகல மனுஷருக்காகவும், உமது அடியேனுக்காகவும் தேவரீருடைய திருக் குமாரன் மரித்தாரென்று விசுவசித்து, அவரே என் நம்பிக்கை யல்லாமல் எனக்கு வேறே நம்பிக்கை இல்லையென்று பிரசித்தமாய்ச் சொல்லுகிறேன்.
பாவியாகிய என் ஆத்தும இரட்சகரான சேசுவே! அடியேனை இரட்சிக்கவல்லவோ இவ்வுலகில் எழுந்தருளி வந்து, அநேக பயணங்களைச் செய்து, எண்ணிலடங்காத கஸ்தி வருத்தங்களை அனுபவித்து, அடி உதை நிந்தை வாதை முதலான நிர்ப்பந்தங்களைச் சகித்து, பூங்காவனத்தில் இரத்தச் வியர்வை வியர்த்து, சிலுவையிலே குரூர இருப்பாணிகளால் அறையுண்டு, ஒரு சாம அளவும் கொடிய அவஸ்தைப்பட்டு, உம்முடைய பிராணனை அளித்தீர். கடைசியாய் ஈட்டியினால் குத்துண்டு உம்முடைய திரு இருதயத்திலிருந்து திவ்விய உதிரத்தைச் சிந்தினீர். ஆ பரம கர்த்தாவே! இவை எல்லாவற்றையும் பார்த்து என்னைத் தண்டியாதேயும் சுவாமி. என்னை நரகத்திலே தள்ளாதேயும். இம்மாத்திரம் பிரயாசைப்பட்டு இவ்வளவு விலைகொடுத்து மீட்டு இரட்சித்த என் ஆத்துமத்தை கைவிடாதேயும் சுவாமி! எப்படியும் என்னை உமதண்டையில் சேர்த்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன் சுவாமீ, ஆமென்.
ஆ, என் கர்த்தாவே! நான் தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனென்கிறதினாலே மிகவும் கஸ்திப்பட்டு அழுது நொந்து பிரலாபிக்கிறேன். இந்தப் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், ஆக்கினையாகவும் எனக்குள்ள வியாதி துன்பங்களையும் கஸ்தி மரணத்தையும் பொறுமையோடே சகித்துத் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். இந்த என்னுடைய இழிவுள்ள சரீரமானது அநேக பாவங்களுக்கு ஏதுவும் காரண முமாயிருந்ததினாலே இந்தச் சரீரந்தானே வியாதியினால் சோர்ந்து, சாவினால் அழிந்து புழுக்களுக்கு இரையாகிப் போகச் சம்மதிக்கிறேன். என் ஆத்துமத்தைத் தேவரீருடைய திருக் கரங்களில் ஒப்பித்து, இந்த ஆத்துமம் தேவரீருடைய நீதிக்கு உத்தரவாதம் பண்ணும்வரையில் உத்தரிக்கிற ஸ்தலத்திலே எவ்வித வேதனையும் அனுபவிக்கச் சம்மதிக்கிறேன். இவ்வுலக சுக செல்வபாக்கியம் யாவையும் நான் அனுபவித்ததினாலே தேவரீருக்கு நன்றியறிந்த மனதோடே தோத்திரம் செலுத்தாமல், அவைகளைக் கொண்டு கணக்கில்லாத பாவங்களைக் கட்டிக்கொண்டேன் என்கிறதினாலே, இந்தச் செல்வ சுப பாக்கியங்களையும் இழந்துபோகச் சம்மதிக்கிறேன். என் உற்றார் பெற்றோர் சிநேகிதர் உபகாரிகள் முதலியவர்கள் என் துர்க்குணத்தினால் மட்டற்ற பாவங்களைச் செய்வதற்குக் காரணமாயிருந்ததினாலே இவர்களையும் விட்டுவிடச் சம்மதிக்கிறேன். நான் இவ்வுலகில் சஞ்சரித்துப் புண்ணிய நெறியிலே நடக்காமல் பாவ வழியிலே நடந்ததினாலே இவ்வுலகத்தையும் விட்டு அகலச் சம்மதிக்கிறேன்.
அருள் நிறைந்த மரியாயே! சர்வேசுரனுடைய பிரதாபமுள்ள மாதாவே சிலுவையிலே வியாகுல வாளால் ஊடுருவப்பட்டு நின்ற தாயே! உம்மை அடியேனுக்கு மாதாவாகவும், அடைக்கலமாகவும், ஆண்டவரிடத்தில் மனுப்பேசு கிறவளாகவும் தேர்ந்து கொள்ளுகிறேன். என் மரணத்தையும் ஈடேற்றத்தையும் உமது கையில் ஒப்புக்கொடுத்து, நான் உமது ஊழியனாகவும் பிள்ளை யாகவும் சாக விரும்புகிறேன் என்று பிரசித்தமாய்ச் சொல்லுகிறேன். சமஸ்த மனுஷருக்கும் ஏக மத்தியஸ்தராகிய சேசுகிறீஸ்து நாதருக்குப் பின் உம்மிடத்தில் என் நம்பிக்கை யெல்லாம் வைக்கிறேன். அடியேனைக் கைவிடாதேயும் தாயே. உம்மை நம்பினேன், உம்மிடத்தில் அடியேனைச் சேர்த்தருளும். அர்ச். மரியாயே! சர்வேசுரனுடைய மாதாவே! பாவியாயிருக்கிற எனக்காக இப்போதும் என் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும், ஆமென்.
அர்ச். சூசையப்பரே! திவ்விய கன்னிகையின் பத்தாவே, சேசுகிறீஸ்துநாதரை வளர்த்த தகப்பனே, என் மரணத்தறுவாயில் என்னைத் தாபரித்து உம்மைப்போல நான் சேசுகிறீஸ்து நாதருடைய திருக்கரங்களிலே மரிக்கும்பொருட்டுத் தயை கூர்ந்தருளும், ஆமென்.
ஆதியில் பசாசைச் செயித்துச் சகல சம்மனசுகளுக்கும் தலைவரான அர்ச். மிக்கேலே, என் மரண சமயத்தில் என்னைக் கெடுக்க வரும் பசாசுகளை வென்றொழித்து என்னைப் பரம வீட்டில் கூட்டிக்கொண்டுவிடும். என்னை விட்டுப் பிரியாத துணைவராகிய என் காவலான சம்மனசானவரே! என் மரணத் தறுவாயில் விசேஷமாய் என்னைக் காப்பாற்றி இஷ்டப்பிரசாதத் தோடு மரிக்கச் செய்தருளும். சகல மோட்சவாசிகளே, நான் கெட்டுப்போகாதபடிக்கு என் மரண சமயத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
கடைசியாய் யாராவது எனக்கு விரோதமும் அநீதமும் நிந்தை முதலான தின்மைகளும் செய்திருந்தால் நான் பொருந்திய மனதோடு அவைகளைப்பொறுத்துக்கொள்ளுகிறேன். நானும் யாருக்காவது குறைச்சல் செய்திருந்தால் முழந்தாளிட்டு அவைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று அவர்களை மன்றாடுகிறேன்.
பிதாவே! பிதாவே! தேவரீருடைய ஏக நேச குமாரனுடைய மரணத்தைக் கொண்டு என் ஆத்துமத்தை உமது கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன். இந்த என் மரணச் சாசனத்தைக் கிருபாகடாட்சமாய் ஏற்றுக்கொள்ள வேணுமென்று கெஞ்சி மன்றாடுகிறேன், ஆமென்.