பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே

மெய்யான கடவுளான சர்வேசுரா! தேவரீர் அடியேனுக்குத் *தகப்பனாயிருந்து, எனக்கு உயிரையும் இஷ்டப்பிரசாதத்தையும் தந்தீரே, மோட்சானந்தத்தையும் அளிப்பீரென்று விசுவசிக்கிறேன். தேவரீர் அளவிறந்த விவேகமும், அளவிறந்த பிரதாபமும், அளவிறந்த வல்லமையும், அளவிறந்த மகிமையும், அளவிறந்த சகல இலட்சணங்களும் கொண்டிருக்கிறீர் என்று அகமகிழ்ந்து சந்தோஷப்படுகிறேன். நானோவெனில் தேவரீருடைய பிள்ளை யாயிருக்கையில் துஷ்டப் பசாசுக்கு அடிமையாய்ப் போனேன் என்கிறதினால் மிகவும் மனம் நொந்து துக்கப்படுகிறேன். ஆராதனைக்குரிய பிதாவே, நான் தேவரீருக்குப் பொருந்தாத துரோகங்களைக் கட்டிக் கொண்டேன் என்கிறதினால், நான் இனி தேவரீருடைய பிள்ளை என்று எண்ணப்படப் பாத்திர வானல்ல. ஆகிலும் தேவரீருடைய ஊழியர்களிலும் அடிமை களிலும் ஒருவனாக என்னைச் சேர்த்தருள வேண்டுமென்று மன்றாடுகிறேன். ஊதாரி மகனாயிருக்கிற நான் தேவரீர் எனக்குச் செய்தருளின சகல நன்மைகளைத் துர்மார்க்கமாய்ச் செலவழித் தேன். நான் செய்த பாவத் துரோகத்தால் வெகுவாய் நொந்துருகி அலைந்து தேவரீருடைய திருப் பாதத்தை திரும்ப அண்டி வருகிறேன். தேவரீருடைய பிரதாபமுள்ள சமூகத்திலிருந்து அடியேனைத் தள்ளாமல், என்றென்றைக்கும் மோட்சவாசி களுடன் வாழ என்னை வரவழைத்தருளும். தேவரீருடைய ஏக குமாரனாகிய சேசுகிறீஸ்து நாதர் பாவிகளை இரட்சிக்க இவ்வுலகில் எழுந்தருளி வந்தாரே, அவர்களுக்காக மனோவாக்குக் கெட்டாத வேதனைகளை அனுபவித்தாரே, இவருடைய விலைமதியாத திரு இரத்தத்தால் மீட்டிரட்சிக்கப்பட்ட பாவியாகிய என் ஆத்துமம் பசாசுக்கு இரையாக விடாதேயும். பிதாவே, சர்வ கிருபையுடைத்தான தகப்பனே, தேவரீருடைய ஊழியனாகிய அடியேனுக்குச் சாவு நெருங்குகின்றதே, தேவரீருக்குச் சித்தம் இருந்தால் அதையும் அடியேன் படுகிற வருத்தங்களையும் மாற்றியருளும். ஆயினும் என் சித்தமல்ல, தேவரீருடைய சித்தத்தின் படியே ஆக வேண்டுமென்று மன்றாடுகிறேன்.

சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! தேவரீர் பரமண்டலங் களிலேயிருந்து அடியேனை வரவழைக்கிறீர். அடியேனுக்கு அவ்விடத்தில் மட்டற்ற கொடையை நிர்ணயித்திருக்கிறீர், அதில் என்னை ஸ்திரப்படுத்தி வேண்டிய ஒத்தாசை எல்லாம் செய்கிறீர். ஆயினும் போர்க் களமாகிய இவ்வுலகில் எண்ணிக்கையில்லாத சத்துருக்களால் சூழப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டுக் கெட்டுப் போவேனோ என்று அங்கலாய்த்துப் பயப்படுகிறேன். தேவரீருடைய மாசில்லாத குமாரனாகிய சேசு கிறீஸ்துநாதர் அடைந்த பேறுபலன்களைப் பார்த்து அடியேனைப் பேரின்ப வீட்டில் சேர்த்தருளுவீரென்று உறுதியாய் நம்பியிருக்கிறேன். இப்பரதேசத்தில் பிரலாபிக்கிற அடியேன் என் பரம பிதாவிடத்தில் எப்போது சேருவேன்! எவ்வித தீமைகளாலும் நிறைந்த இவ்வுலகை விட்டுச் சர்வ நன்மை உடைத்தான பரலோகத்துக்கு எப்போது ஏறுவேன்! என்றென்றைக்கும் சீவித்திருக்கப் போகிற பாக்கியத்தை அடைவதற்கு இவ்வுலகில் கொஞ்ச நேரம் வருத்தப்படுகிறதற்குப் பின் வாங்குவேனோ? என் ஆத்துமமே, இன்னும் சற்று நேரம் பொறு. இதோ பரலோகத்தில் என்றென்றைக்கும் வாழ்வாய். இப்படியே எனக்கு அநுக்கிரகம் செய்தருளும், பிதாவே.