கணவனின் செபம்

பூலோகத்திலே வருத்தமில்லாத காரியம் ஒன்றுமில்லை. ஆனாலும் சமுசாரமானது மகா தொல்லையுள்ளதென்று நான் அறியாத காரியமல்ல. என் சர்வேசுரா! பரலோக பாக்கியத்திற்குத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் பூமியிலே அநேகம் துன்பப்பட உமக்கு சித்தமானதால் அதற்கு விரோதம் பண்ண நான் யார்? எனக்குச் சமுசாரத்தாலும், பிள்ளைகளாலும், உறவின் முறைகளாலும் வரும் துன்பங்களை நீர் நன்றாய் அறிந்திருக்கிறீரே. அவைகளை நீக்க நான் உம்மிடத்தில் கேட்க எனக்கு வாய் வரவில்லை. அவைகளைப் பொறுமையோடு சகித்து உமது சித்தத்துக்கு ஒத்து தோபியாஸ் என்பவரும், ஜோப் என்பவரும் தங்கள் மனைவிகளுடைய நியாயமற்ற முறைப்பாடுகளைப் பொறுத்தாற்போல, நானும் பொறுக்க எனக்குக் கிருபை செய்தருளும். என் குடும்பத்தில் உமது பழி இறங்காமல் என்னைச் சேர்ந்தவர்களும் உம்மைச் சிநேகித்து உமது வேத விதிப்படி நடக்க அநுக்கிரகம் செய்தருளும். வயிற்றிற்கு உணவு தேடுகையில் இலௌகீக காரியங்களில் பற்றுதல் கொண்டு மோட்ச நித்திய பாக்கியத்தை நான் இழக்கவிடாதேயும். அக்காரியங்களைத் தேடுவதில் சந்தோஷமடைந்து உமது உண்மையை நான் இழக்காமலிருக்கச் செய்தருளும் சுவாமீ, ஆமென்.