இறைவா உம்மை வாழ்த்துகின்றோம் ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவா உம்மை வாழ்த்துகின்றோம்

ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்


1. நித்திய தந்தாய் உமை என்றும்

இத்தரை எல்லாம் வணங்கிடுமே

விண்ணும் விண்ணக தூதர்களும்

விண்ணின் மாண்புறு ஆற்றல்களும்


2. செரபீம் கெரபீம் யாவருமே

சேர்ந்துமக் கென்றும் பண்ணிசைப்பர்

தூயவர் தூயவர் தூயவராம்

நாயகன் மூவுலகாள் இறைவன்


3. மாட்சிமை மிக்க உம் மகத்துவத்தால்

வானமும் வையமும் நிறைந்துள்ளன

அப்போஸ்தலரின் அருள் அணியும்

இறைவாக்கினரின் புகழ் அணியும்


4. மறைசாட்சியரின் வெண்குழுவும்

நிறைவாய் உம்மைப் போற்றிடுமே

இத்தரை எங்கும் திருச்சபையும்

பக்தியாய் உம்மை ஏற்றிடுமே


5. பகருதற்குரிய மாண்புடையோய்

தகைசால் தந்தாய் தாள் பணிந்தோம்

உம் ஒரே திருமகன் இயேசுவையும்

எம் இறையெனப் புகழ்ந்தேற்றுகிறோம்


6. தேற்றரவெமக்குத் தருபவராம்

தூய உம் ஆவியைத் துதிக்கின்றோம்

வேந்தே மாண்புயர் கிறிஸ்துவே நீர்

தந்தையின் நித்திய மகனாவீர்


7. மண்ணுயிர் மீட்க மனங்கொண்டு

கன்னியின் வயிற்றில் கருவானீர்

சாவின் கொடுக்கை முறித்தழித்து

பாவிகள் எமக்கு வான் திறந்தீர்


8. இறுதி நாளில் நடுத்தீர்க்க

வருவீர் என யாம் ஏற்கின்றோம்

உம் திருஇரத்தம் மீட்ட எம்மை

அன்பாய் காத்திட வேண்டுகின்றோம்


9. முடியா மகிமையில் புனிதருடன்

அடியார் எம்மையும் சேர்த்திடுவீர்

உம்மவர் நாங்கள் எமை மீட்பீர்

உம் உடைமைக்கே வாழ்வளிப்பீர்


10. எம்மை ஆண்டு இறைமக்களாய்

என்றும் சிறப்புறச் செய்திடுவீர்

எந்நாளும் உம்மை வாழ்த்துகிறோம்

என்றும் உம் பெயர் போற்றுகிறோம்


11. இறைவா இந்நாள் எம்பாவக்

கறைகள் போக்கிக் காத்திடுவீர்

கனிவாய் இறங்கும் ஆண்டவரே

கனிவாய் இரங்கும் எம்மீதே


12. உம்மையே நம்பினோம் ஆண்டவரே

எம்மீதிரக்கம் கொள்வீரே

உம்துணை நம்பினோம் ஆண்டவரே

என்றும் கலக்கம் அடையோமே