அவரவர் வாழும்பொழுதே தாங்கள் சாகிற வேளையில் இருக்கிறதைப் போல் செய்யவேண்டிய நன்முயற்சிகள்
ஏகாதிபதியுமாய், கருணாம்பரமுமாய், சர்வ காரியங்களை நீதிப்பிரகாரத்தோடு நடத்திக்கொண்டு வருகிறவருமாகிய சர்வ வல்லவரான* சர்வேசுரா சுவாமீ! எங்கள் எல்லாரையும் சாகக் கட்டளையிட்டு, எப்பொழுதோ, எங்கேயோ, எப்படியோ மடிவோம் என்று நாங்கள் அறியாதிருக்கத் தேவரீர் திருவுளமான படியினாலே, இப்பொழுது உமது சந்நிதியிலே சாஷ்டாங்கமாக விழுந்து, உமது திரு சித்தத்தை வணங்கி ஸ்துதித்து நமஸ்காரம் பண்ணுகிறோம். தேவரீர் எப்பொழுது எங்களை அழைக்க சித்தமாயிருப்பீரோ? இளமையிலேயோ, வாலிபத்திலேயோ, மூப்பிலேயோ, விருத்தாப்பியத்திலேயோ என்று நாங்கள் அறியாதிருக்கிறபடியால் உமது சித்தத்தின்படியே ஆகட்டுமென்று பொறுமையாய்க் கீழ்ப்படிந்து தேவரீருடைய திருவுளத்தை நிறைவேற்ற ஆவலாய் இருக்கிறோம். தேவரீருடைய சித்தத்தின் படியே எங்களுடைய ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிய எப்போது எங்களுக்கு மரணம் வருமோ அறியோம். அந்த மரணத்தைத் தேவரீருடைய மகத்துவத்துக்குப் பலியாக உமது திருக்குமாரன் அடைந்த மரணத்தோடு சேர்த்து ஏற்றுக்கொள்ள வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய அநுக்கிரகத்தைக்கொண்டு சத்திய வேதத் திருச்சபை போதிக்கிற சத்தியங்களை எல்லாம் விசுவசித்து தேவரீருடைய வார்த்தையை நம்பி தேவரீர் எங்களுக்கு தந்தருளுவோமென்று வார்த்தைப்பாடு கொடுத்த நன்மைகள் எல்லாம் பெறக் காத்துக்கொண்டு உம்மையே நேசித்து நாடி உம்மிடத்தில் சேர்ந்து பேரின்ப பாக்கியத்தை அடைய விரும்புகிறோம்.
நாங்கள் சாகிற தருணத்திலே நோய் வந்து சர்வாங்கமும் கெடுத்து, நினைவு கெட்டு, புத்தி மயங்கி, மனமிடிந்து, செய்ய வேண்டிய நல்ல முயற்சிகளைச் செய்யமுடியாது போவோமோ என்று பயந்து, இப்பொழுதே அம்முயற்சிகளைச் செய்கிறோம். சுவாமீ, தேவரீர் இவைகளை நாங்கள் எங்கள் மரணத்தருவாயில் செய்கிறதுபோலே கிருபையாய் ஏற்றுக்கொள்ள வேணுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
விசுவாசப் பிரகரணம்
கருணாம்பர சர்வேசுரா சுவாமீ! தேவரீர் தப்பில்லாத சத்திய சொரூபியாயிருக்கிறபடியினாலேயும், தேவரீர் அருளிச் செய்தபடி யினாலேயும் திருச்சபை விசுவசித்துப் போதிக்கிறதெல்லாவற்றையும் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். தேவரீர் பிதாச் சுதன் இஸ்பிரீத்து சாந்து மூன்றாட்களாயிருந்து ஒரே சர்வேசுரனா யிருக்கிறீர் என்றும், ஆராதனைக்குரிய மூன்றாட்களுக்குள்ளே இரண்டாம் ஆளாகிய சுதனான சர்வேசுரன் மனுஷாவதாரம் செய்து அர்ச். கன்னிமரியாளிடம் பிறந்து சிலுவையிலே அறையுண்டு மரித்தடக்கப்பட்டார் என்றும், மரித்தவர்கள் இடத்திலிருந்து உயிர்தெழுந்தருளினார் என்றும், பரலோகத்துக்கு ஏறினார் என்றும், இனிமேல் நடுத்தீர்க்க வருவார் என்றும், மனுஷர் எல்லாரையும் எழுப்பி அவரவர் செய்த பாவ புண்ணியத்துக்குத் தக்க தீர்வையிட்டு, பொல்லாதவர்களை நரகத்திலே தள்ளி, நல்லவர்களை மோட்ச பேரின்ப பாக்கியத்தில் சேர்ப்பாரென்றும், மோட்சத்துக்கும் நரகத்துக்கும் முடிவில்லை என்றும், முழு மனதோடே விசுவசிக்கிறேன். இதையே என் மரணபரியந்தம் விசுவசிப்பேன், ஆமென்.
நம்பிக்கைப் பிரகரணம்
சர்வேசுரா! சுவாமீ! தேவரீருடைய மட்டில்லாத கிருபாகடாச் சத்தையும் சேசுநாத சுவாமீ பட்ட பாடுகளின் பலனையும் குறித்து தேவரீர் அடியேன் பேரில் இரங்கி, நான் செய்த பாவமெல்லாம் பொறுத்து, இஷ்டப்பிரசாதத்தைத் தந்து, என்னை நரகத்திலே தள்ளாமல் மோட்ச பாக்கியம் தந்தருளுவீர் என்று முழு மனதோடே நம்பியிருக்கிறேன். இதுவே மரண பரியந்தம் என் உறுதியான நம்பிக்கையாயிருக்கும் சுவாமீ, ஆமென்.
தேவசிநேகப் பிரகரணம்
சர்வேசுரா சுவாமீ! தேவரீர் அளவில்லாத சகல நன்மைச் சொரூபியாயிருக்கிறபடியிலே எல்லாவற்றையும் பார்க்கத் தேவரீரைச் சிநேகிக்கிறேன். தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேன் என்கிறதினாலே அதிக மனஸ்தாப மாயிருக்கிறேன். இனிமேல் ஒருக்காலும் தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்வதில்லையென்று கெட்டியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன். இப்படியே இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் எல்லாவற்றையும் பார்க்கத் தேவரீரை சிநேகிக்கக் கிருபை செய்தருளும் சுவாமீ, ஆமென்.