அப்பத்தின் சாயலுள் மறைந்தே இருக்கும்
ஒப்பற்ற தேவா உன்னடி பணிவோம்
அத்தனே உன்னையான் சிந்திக்க சிந்திக்க
எத்துணை என்னுள்ளம் கனிந்திளகுதே
சேசு அமிர்த மன்னாவே தோத்ரம் தோத்ரமே
தாசர் எமது விசுவாசம் தழைத் தோங்கச் செய்வாயே
1. அப்பத்தின் வருணம் உருசி ஸ்பரிசம்
இப்போது தோன்றினும் இஃதப்பமில்லையே
அப்பமுன் மேனியாய் முற்றிலும் மாறிற்றே
தப்பிலா சத்திய நின்வாக்கு ஈதன்றோ
2. மறைந்தே போயதே குருசில் தேவத்வம்
மறைந்த திங்கோ நின் மனிதத் தன்மையும்
விசுவாசித்திரு சத்தியந் தனையும்
விமலா கேட்கின்றேன் நற்கள்வன் கேட்டதை
3. உந்தனின் காயங்கள் காண்கிலேன் தோமைபோல்
என்கிலும் உன்னையென் ஆண்டவர் என்கின்றேன்
எந்தையே உன்னை யான் அதிக மதிகம்
என்றுமே நம்பியே நேசிக்கச் செய்யுமே
4. எம்பிரான் மரண ஞாபகச்சின்னமே
இம்மை வாழ் மக்களின் ஜீவிய விருந்தே
வரந்தா உனையான் நினைந்தே எப்போதும்
பரம ஆனந்தம் கொண்டு மகிழவே
5. அன்புள்ள பெலிக்கான் ஆன என் ஆண்டவா
என்பவ கறையை நீக்குமுன் இரத்தத்தால்
உந்தனின் ஓர்துளி உதிரம் போதுமே
உன்னதா பூலோக மாசெல்லாம் போக்கவே
6. சேசுவே மறைவாய் இங்குமைக் காண்கின்றேன்
நேசரே ஆசையாய் ஒன்றுமைக் கேட்கின்றேன்
நின்னெழில் வதனம் நேரில் ஓர் தினமே
கண்டுளம் பூரித்தே ஆனந்தங் கொள்ளவே