அனந்த தயை சுரூபியாயிருக்கிற என் சர்வேசுரா சுவாமீ, தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராயிருக் கிறபடியினாலே எல்லாவற்றையும் விட உம்மை நான் முழு மனத்தோடே நேசிக்கிறேன். இப்படிப்பட்ட தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனநொந்து மெத்த மனஸ்தாபமாயிருக்கிறேன். எனக்கிதுவே மனஸ்தாபமில்லாமல் வேறே மனஸ்தாபமில்லை. எனக்கிதுவே துக்கமில்லாமல் வேறே துக்கமில்லை. இனிமேல் ஒருபோதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லையென்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை பண்ணுகிறேன். மேலும் எனக்குப் பலம் போதாதென்கிறதினாலே சேசுநாதசுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து என் பாவங்களை எல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருளுவீர் என்று முழு மனதோடு நம்பியிருக்கிறேன். திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்கிற சத்தியங்களை எல்லாம் தேவரீர் தாமே அறிவித்தபடியினாலே * நானும் உறுதியாக விசுவசிக்கிறேன். ஆமென்.
அதன்மேலும் சுவாமியை நோக்கி நல்ல பிரதிக்கினை செய்கிற வகையாவது:
சர்வேசுரா சுவாமீ, தேவரீர் அருளிச் செய்த தேவ கற்பனையின்படியே அடியேன் அடக்கத்தோடு நடக்கத் துணிந்திருக் கிறபடியினாலே என்னிடத்தில் இருக்கிற ஆங்காரம் கோபம் முதலிய விசேஷ துர்க்குணங்களை நீக்கி, இன்று அநேக தருமங்களைச் செய்து, வாக்கினாலேயும் கிரியையினாலேயும் தாழ்ச்சி, பொறுமை, கற்பு முதலிய புண்ணியங்களை அடையப் பிரயாசைப் படுவேன். இவையெல்லாம் என்னுடைய பலத்தினாலே கூடாதே, பரிசுத்த தேவமாதாவே, எனக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும். என் காவலான சம்மனசானவரே, என்னைப் புண்ணிய நன்னெறியில் நடப்பித்துக் காத்தருளும். நான் பேர்கொண்டிருக்கிற அர்ச்சிய சிஷ்டவரே, உம்மைப் போல நான் இவ்வுலகத்தில் சர்வேசுரனைப் பத்தியோடே ஆராதிக்கவும், உம்மோடே அவரைப் பரலோகத்திலே தரிசித்துத் துதிக்கவும் தேவ கிருபை எனக்குக் கிடைக்கும்படியாக மன்றாடும். ஆமென்.