நன்மரணம் அடைவதற்குச் சுகிர்த மன்றாட்டு

நன்மரணம் அடைவதற்குச் சேசுகிறீஸ்துநாதருடைய திவ்விய இருதயத்தை நோக்கிச் சொல்லத்தகும் சுகிர்த மன்றாட்டு

ஆண்டவரான சேசுகிறீஸ்துநாதரே! கருணை நிறைந்த பிதாவே தயாபரரான சர்வேசுரா! அடியேன் மிகுந்த மனஸ்தாபப் பட்டுக் கலங்கிப் பிரலாபித்து உமது சந்நிதியிலே நிற்கிறேன். அடியேனுக்கு நல்லமரணமும், நல்ல தீர்வையும் கிடைக்கும்படிக்குத் தேவரீர் அநுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன்.

என் காலிரண்டும் அசைவின்றி உஷ்ணமின்றி என் படுக்கை யிலே கடினமாய் வலித்து, நான் இவ்வுலகில் செய்த பிரயாணம் முடிந்ததென்று காட்டும் போது, தயாபர சேசுவே இரக்கமாயிரும் சுவாமீ.

என் கண்ணிரண்டும் பஞ்சடைந்து அகோரமாய்த் திகைத்துப் பயங்கரமாய் விழித்து இவ்வுலக பிரகாசத்தைக் கடைசியாய்ப் பார்க்கும்போது, தயாபர சேசுவே இரக்கமாயிரும் சுவாமீ.

என் கையிரண்டும் அதிர்ந்து நடுங்கிப் பலமற்று உமது திருச் சிலுவைச் சுருபத்தைக் கடைசி சரணமாக ஏந்தும்போது, தயாபர சேசுவே இரக்கமாயிரும் சுவாமீ.

என் உதடு இரண்டும் குளிர்ந்து கறுத்து கிடுகிடுத்து உமது திரு நாமத்தை அபய சத்தமாய் உச்சரிக்கும்போது, தயாபர சேசுவே இரக்கமாயிரும் சுவாமீ.

என் கன்னமிரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டி வெளுத்து அகோரமாய்க் குழிந்து அவலமாய்ச் சுருங்கி என்னைச் சூழ்ந்து வருகிறவர்களுக்குப் பயங்கரமும் அருவருப்பும் வருவிக்கும் போது தயாபர சேசுவே இரக்கமாயிரும் சுவாமீ.

என் காதிரண்டும் கேள்வியற்று மனுஷ சம்பாஷணையை விட்டுப் பிரிந்து, நீர் என்பேரிலே ஊழியுள்ளகாலம் இடப்போகிற தீர்வையைக் கேட்க ஏதுவாகும்போது தயாபர சேசுவே இரக்கமாயிரும் சுவாமீ.

என் தலையோடு மயிரொட்டி நெற்றியிலே வியர்வையெழ, தோஷத்தால் என் நாக்கு வரண்டுபோக, என் உடலெல்லாம் துர்க்கந்தம் வீச, என் நாடி விழ, பலவீனம் மேலாட என் முடிவு நெருங்கும்போது, தயாபர சேசுவே இரக்கமாயிரும் சுவாமீ.

மயங்கும் என் மனதிலே அச்சமுறுத்த வீண் தோற்றங்களும் பயங்கரமுள்ள பூதங்களும் காணப்பட்டு, பசாசு என் பாவங்களை மிகுவித்து உமது நீதியைப் பாராட்டி உமது அளவில்லாத கிருபையை மறைத்து நான் அவநம்பிக்கையாய் சாக என்னோடு கடைசி யுத்தம் நடத்தும்போது, தயாபர சேசுவே இரக்கமாயிரும் சுவாமீ.

நிர்ப்பலமான என் இருதயமானது வியாதியின் வருத்தத்தால் தளர்ந்து, சாவின் அச்சத்தால் தோய்ந்து, பசாசின் விரோதத்தால் சோர்ந்து கடைசியாய் துடித்து ஓயப்போகும் போது, தயாபர சேசுவே இரக்கமாயிரும் சுவாமீ.

என் கண்களிலிருந்து கிட்டின் கடைசிக் குறியாகக் கண்ணீர் சொரிந்து விழ, இந்தக் கண்ணீரை என் பாவங்களுக்குப் பரிகாரமாகக் கிருபையாய் ஏற்றுக்கொண்டு, பயங்கரமான அவ்வேளையிலே என்னைக் கைவிடாதேயும் சுவாமீ. தயாபர சேசுவே இரக்கமாயிரும் சுவாமீ.

என் சுற்றத்தார் சிநேகிதர் என்னைச் சூழ்ந்துகொண்டு அலறிப்பதறி மாரடித்து, எனக்காக உம்மை மன்றாடி ஐயோ சாகிறானென்று சொல்லி அழும்போது, தயாபர சேசுவே இரக்கமாயிரும் சுவாமீ.

என் சக்தியற்று என் ஐம்புலன்கள் பலமில்லாதிருக்க, இவ்வுலகில் உள்ளதெல்லாம் என்னைவிட்டுப் பிரிய நான் மரண இக்கட்டுகளை களைந்து கலங்கி உயிரை இழக்கும்போது, தயாபர சேசுவே இரக்கமாயிரும் சுவாமீ.

நான் கடைசியான சுவாசம் விட்டு என் ஆத்துமம் என் சரீரத்தை விட்டுப் பிரியப் பிரயாசைப்படும்போது, தயாபர சேசுவே இரக்கமாயிரும் சுவாமீ.

என் ஆத்துமம் புறப்பட்டு, என் சரீரம் உயிரில்லாமல் புழுக்களுக்கு இரையாக என்றும் பிணமாக விடப்படும்போது, தயாபர சேசுவே இரக்கமாயிரும் சுவாமீ.

இந்த என் அழிவை உம்முடைய மகத்துவத்துக்குப் பலியாகக் கிருபையாய் ஏற்றுக்கொள்ளும். 

கடைசியாய், என் ஆத்துமமானது பிரதாபமுள்ள உமது சமூகத்திலே நிறுத்தப்பட்டுத் தன்னுடைய தீர்மானத்தைக் கேட்க நடுங்கி நிற்கும்போது, என்னை உமது அண்டையிலிருந்து தள்ளாமல் என்னைக் கிருபாகடாட்சத்தோடு பார்த்து உம்மை என்றென்றைக்கும் வாழ்த்தி ஸ்துதிக்க உமது இராச்சியத்தில் என்னைப் பிரவேசிக்கச் செய்தருளும். 

பிரார்த்திக்கக்கடவோம்

சேசுகிறீஸ்துநாதருடைய இரக்கம் நிறைந்த திவ்விய இருதயமே, ஊதாரி மகனை மிகுந்த பட்சத்தோடு அணைத்துக் கொள்ளும் நல்ல தகப்பனே, மேட்டிலும் பள்ளத்திலும் சிதறிப் போன ஆட்டுக்குட்டியைத் தேடும் கவனமுள்ள இடையனே, பூங்காவனத்தில் துக்கசாகரத்தில் அமிழ்ந்து எங்களுக்காகச் சர்வாங்கத்திலும் இரத்த வியர்வை வியர்த்த, சிலுவைமரத்தில் மூன்று மணிநேரம் அவஸ்தைப்பட்டுச் சாவின் வருத்தம் எல்லாவற்றையும் அனுபவித்து, ஈட்டியால் குத்துண்டு உமது திரு உதிரமெல்லாம் சிந்திப்போடச் சித்தமானீரே. சகல சிநேகிதரிலும் உத்தமமான சிநேகிதரே! தான் பெற்று வளர்த்த குமாரனை நேசிக்கும் தாயாரிலும் எங்களை அதிகமாய் நேசிக்கிற திவ்விய இருதயமே, எங்களுக்கு நல்ல மரணம் கட்டளையிட வேண்டுமென்று உம்மை நம்பிப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம். இந்த அபாயமுள்ள தருணத்திலே உம்மை நேசித்து நம்பி வாழ்த்தித் துதித்துவருகிற எங்களைத் தேவரீருக்கு சத்துருவாகிய பசாசுக்கு இரையாக ஒட்டாமல் எங்களைத் தாபரித்துக் காப்பாற்றி தேவரீர், அண்டையில் என்றென்றைக்கும் வாழ எங்களைச் சேர்த்தருளும். உம்மை நம்பினோம், உம்மை நம்பினோம், எங்களைக் கைவிடாதேயும் சுவாமி, ஆமென்.