தயாபர சர்வேசுரா! தேவரீருடைய பரிசுத்தமும் பிரதாபமுள்ள திரு நாமதேயத்தை வணங்கி ஆராதிக்க அடியேனை இவ்வுலகத்தில் வைத்திருக்கிறீர். ஆகிலும் இந்தத் திரு நாமதேயத்தை வணங்காமல் போனதன்றியே, அதை அநேகம் முறை நிந்தித்து தூஷணித்தேன் என்கிறதினால், மிகவும் விசனப் படுகிறேன். என் மனதில் கொடிய அகங்காரத்தைக் கொண்டு என்னைப் பெருமையாய் எண்ணிச் சிலாக்கியமாய்ப் பாராட்டி, அகந்தையாய் நடத்தி, அகங்காரத்தால் கெட்டுப் போன பசாசைக் கண்டுபாவித்தேன். நான் கெட்டவனாயிருந்தும் நல்லவனென்று எண்ணப்படவும், அநேக துரோகங்களைக் கட்டிக் கொண்டும் தரும புண்ணியமுள்ளவனென்று சொல்லப்படவும், அகோர ஆசையால் தேடினேன். ஏகமாய் ஸ்துதிக்கப்படப் பாத்திரமான சர்வேசுரா! தேவரீருடைய திருக்குமாரனுடைய தாழ்மையைப் பார்த்து, என் அகங்காரத்தைப் பொறுத்து, அகங்காரியான துஷ்டப் பசாசோடு என்னைத் தள்ளாமல் என்னை வரவழைத்தருளும்.