என் சர்வேசுரா! தேவரீர் எனக்குப் பிதாவாயிருக்கிறதினால் எத்தனை பாக்கியம்! தேவரீர் வீற்றிருக்கும் மோட்ச இராச்சியமே ஒருநாள் என் குடியிருப்பாகும் என்று நினைக்கும் பொழுது எனக்கு எத்தனை அகமகிழ்ச்சி! உமது திரு நாமம் உலகமெங்கும் ஸ்துதிக்கப்படுவதாக. சகல மனிதர் இருதயத்திலும் நினைவிலும் எகாதிபதியாய் நின்று, ஆண்டருளும். உமது பிள்ளைகளுக்கு வேண்டிய ஆத்தும சரீர உணவுகள் குறைபடவொட்டாதேயும் பிறத்தியாருடைய குற்றங்களை நாங்கள் முழுமனதோடு பொறுத்துக் கொள்ளுகிறோம், தேவரீரும் எங்கள் குற்றங்களைப் பொறுத்தருளும். இந்த நிர்ப்பாக்கியம் நிறைந்த உலகத்தில் நாங்கள் சீவித்திருக்கு மட்டும் எங்களை சூழ்ந்து வரும் சோதனையில் நாங்கள் அகப்பட்டு மோசம் போகவொட்டாதேயும். சகல கேட்டிலும் கொடிய கேடாகிற பாவத்தில் எங்களை விழவொட்டாமல் காத்து இரட்சியும். மற்றச் சகல பொல்லாங்குகளையும் அகற்றி நீக்கக் கிருபை செய்தருளும் சுவாமீ, ஆமென்.