♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆழிப்பேரலை கரை தாண்டி வந்தபோது
வாழ்விழந்தோர் துன்பமதை சொல்லும் வகை ஏது
நெய்தல் மக்கள் வாழ்வு உந்தன் கருணையிலே
தெய்வபக்தி வாழ்வதுந்தன் கரையினிலே
செய்யும் தொழில் அத்தனையும் உன்னுடனே
வாழ்வுடனும் சாவுடனும் போர் தினமே
தந்தை உன்னை நம்பி வந்தார் படகையல்ல
எந்தத் தாய்க்கும் உன்னில் என்றும் பயமுமல்ல
மெல்லலைகள் மலை உயர வடிவம் கொள்ள
கோரமுகம் கொண்டு விட்டாய் என்ன சொல்ல
பிறந்தது உன் கரையிலே பிழைத்தது உன் தயவிலே
தினம் தினமும் படகிலே மிதந்தது உன் அலையிலே
வளர்ந்தது உன் அருகிலே தூங்கியதுன் மணலிலே
வலை பிடித்த மீனிலே உயர்ந்ததெங்கள் ஊர்களே
1. பேரலை ஓடிவந்து கரையில் மோதியே
போனதும் போனதெங்கள் ஜீவநாடியே
வீடுகள் கட்டினோம் செல்வங்கள் சேர்த்து வைத்தோம்
அன்பின் குழந்தைகளை ஆளாக்கினோம்
எல்லாம் இழந்தோம் அலையோடு போக வாடினோம்
மூன்றில் ஒன்று குழந்தைகள் முளைவிடாத வாழ்வுகள்
அன்னை என்ற சொல்லையும் அறிந்திடாத மழலைகள்
மடியிருந்த மகளையும் கைப்பிடித்த மகனையும்
அலைபறித்து சென்றதை மறந்திடாத இதயங்கள்
2. மானிடநேயம் பொங்கி ஊற்றெடுத்தது
பூமியே ஓர் குடும்பம் ஆகிவிட்டது
ஒவ்வொரு சேதியும் தீயாக ஆழ்மனதும்
சாவின் களை படிந்த வீடானது
எல்லா மனமும் மனிதாபிமானம் வாழுது
உலக உள்ளம் கனிந்தது உதவிக் கைகள் விரித்தது
துயரம் மாறும் நாள் வரை துணையிருக்க விழைந்தது
மதவெறிகள் மறைந்தது மனிதநெறியில் இணைந்தது
சாதிச்சார்பு சரிந்தது சாவில் கருணை தெரிந்தது
துன்பம் உண்டு அழிவும் உண்டு வாழ்வினிலே
நோயும் உண்டு சாவும் உண்டு உலகினிலே
நல்ல தொண்டு செய்பவர்கள் வழியினிலே
நமது தெய்வம் கருணையுண்டு கவலையில்லை