உன்னத பரமண்டலத்தில் சர்வேசுரனுக்குத் தோத்திரமும் பூலோகத்தில் சுத்த மனதுள்ளவர்களுக்குச் சமாதானமும் உண்டாகக்கடவது. ஆண்டவரே! இராசாக்களுக்கு அதிபதி இராசாவே! உந்நத பரம கடவுளே, மெய்யான தேவனே! சர்வ வல்லமையுள்ள பிதாவே! தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்து ஆராதித்து வணங்கி நமஸ்கரித்து மிகுந்த தாழ்ச்சி வினயத்துடன் உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். ஆராதிதக்கப் பாத்திரமான சேசுநாதரே, பிதாவின் ஏக குமாரரே, சர்வ சுயம்பர கர்த்தாவான சர்வேசுரா, உலகத்தினுடைய பாவங்களைப் போக்க வந்த சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையே, எங்கள் பேரிலே இரக்கமாயிரும். பரலோகத்தில் உமது பிதாவோடுகூட இராச்சிய பாரம் செய்கிற நீர், எங்கள் பேரில் உமது கிருபைக் கண்ணைத் திருப்பும். எங்கள் கர்த்தரான சேசுவே! தேவரீர் ஒருவர் மாத்திரமே மட்டற்ற பரிசுத்தருமாய் அளவற்ற வல்லமையுள்ளவருமாய், பிதா வினுடைய மகிமைச் சோபநத்தில் இஸ்பிரீத்துசாந்துவோடு கூட முடிவற்ற தோத்திரத்திற்குப் பாத்திரவானயிருக்கிற படியினாலே, தேவரீர் ஒருவர் மாத்திரமே எங்களை இரட்சிக்கக்கூடும் என்கிறதினாலே எங்களை இரட்சித்தருளும். ஆமென்.