மாமிசமாயின வார்த்தையே! திவ்விய சேசுவே! மெய்யான தேவனும் மெய்யான மனதனும் ஒன்றாயினவரே! தேவரீர் இந்தப் பீடத்தின் பேரில் மெய்யாகவே எழுந்தருளி வந்திருக்கிறீரென்று உறுதியாக விசுவசித்து, மிகுந்த தாழ்ச்சியோடு வணங்கி ஆராதித்து, முழு மனதோடு உம்மை ஆசித்து நேசிக்கிறேன். என்மேல் வைத்த நிகரில்லாத அன்பினால், தேவரீர் இந்தப் பீடத்தின் மேல் எழுந்தருளி வந்தமையால் என்னை முழுவதும் உமக்குத் தேவ வசீகரஞ் செய்கிறேன் சுவாமீ. சகல மனிதருக்காகத் தேவரீர் சிந்தின இந்த விலைமதியாத திரு இரத்தத்தை ஆராதனை செய்கிறேன். என் சர்வேசுரா, எனக்காகச் சிந்தின இந்தத் திரு இரத்தம் வீண் போகாதென்று நம்புகிறேன். உமது திரு இரத்தத் தின் பலன்களை நான் அடையும் பொருட்டாக அநுக்கிரகம் செய்தருளும். மகா அன்புக்குரிய என் திவ்விய சேசுவே, எனக்காக உம்முடைய இந்தத் திரு இரத்தத்தைச் சிந்த உண்டாயிருந்த அளவில்லாத உமது சிநேகத்திற்கு நன்றியறிந்த தோத்திரமாக, நானும் என் இரத்தத்தையெல்லாம் தேவரீருக்கு முழுவதும் ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமீ.