ஓ என் சேசுநாதரே! நீரோ இந்த ஏழைப் பாவிகளுடைய பாவங்களைப் போக்க மனுவுருவெடுத்துப் பூலோகத்தில் வந்தீர்? ஆ! இதென்ன பிரமிப்பைத்தரும் அதிசயம்! சகலமான அண்டகோளங்களைச் செய்து, கோடானகோடி மனிதர்களை உண்டுபண்ணின தெய்வமானவர் இதோ ஒரு குழந்தையானார். ஆ! சுவாமீ! பூலோகத்துக்கும் பரலோகத்துக்கும் உறவு கட்ட வந்தீரே, தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற வந்தீரே, பாவங்களைப் போக்க வந்த சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையே! உம்மைக் குறித்துச் சொல்லிய அற்புதங்களை முடிக்க வந்துவிட்டீரே. ஆ! என் அன்பனே! ஆ! என் ராசாவே! என்னேச நம்பிக்கையே! நான் உம்மை இருகரங் குவித்து இந்திரியங்களை புலன்களை ஒடுக்கிக் கொண்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி உம்மை நமஸ்கரிக்கிறேன். ஓ, ஆச்சரியமே! பரலோக பூலோக பாதாள மெனப்பட்ட மூன்று லோகங்களையும் இழுத்தாட்டி நடத்தும் சக்தியுடைத்தான கடவுளைப் பாவமானது எந்தக் கோலமாக்கிப் போட்டது! ஆ, திவ்விய பாலனே நான் உமது நிமித்தம் பூலோக பாக்கியம் செல்வசுகம், சரீரவிச்சை யாவற்றையும் விட்டு, இன்று முதல் உமது அன்புக்குச் சரிசொல்ல என்னை முழுதும் அழித்துக் கொண்டு உமது பாதமே கதியென்று உம்மைக் கெட்டியாய்த் தழுவி நமஸ்கரிக்கிறேன். ஆ, சேசுநாதரே! நரகத்தை அடைத்து, மோட்சத்தைத் திறக்க வந்த இரட்சகரே! சம்மனசுகளோடு மங்களம் பாடி, உல்லாசிக்க எனக்குச் சக்தியும் புத்தியின் ஒளியுமில்லாவிட்டாலும், இடையர்களோடாகிலும் உம்முடைய திருப்பாதத்தில் விழுந்து உம்மைக் கும்பிடுகிறேன். ஆ, என் கர்த்தாவே என்னை இவ்வ்ளவு தூரந்தேடி வந்த நாதரே, அருள் வேதபோதகரே, அற்புத நேசதேவனே, என்னை உமது கடைக்கண்ணால் பார்த்தருளும், நானும் சுத்தமாவேன். அர்ச். மரியாயே! அர்ச். சூசையப்பரே! மகா பலவீனமுள்ள என்பேரில் உங்கள் கடைவிழியைத் திருப்பியருளுங்கள். ஓ, வானலோக வாசிகளே! சிநேகத்தின் சுவாமியை எந்த வகையாய் ஆராதிக்கிற தென்று எனக்குக் கற்பியுங்கள். ஆ, என் அன்பே ! என் ஆண்டவரே! என் ஆத்தும் குருவே! என் சுவாமீ, உம்மை என்னென்று சொல்வேன்? நீரே அருட்கடல், நீரே ஒளிமுகில். ஆ! வான பாக்கியமே, தேனருவியே, உம்முடைய அன்பை யோசிக்க என்னிருதயம் தணலிலிட்டா விறுகுபோல் பற்றிக் கொண்டுபோகுதே! என்னன்பனே, பிதாவே! நீரோ மோட்ச ராச்சியத்துக்கு என்னைப் பிடித்துக்கொண்டு போகவந்தீரோ என்னை தேடி இவ்வளவு தூரம் இந்த வேஷத்தோடு வந்தீரோ? ஓ! அப்பா! இதோ நான் உம்மை நாடுகிறேன். இனி நான் பூலோகவழி போகேன். பாவவழி நடவேன். நீர் என் கையைப் பிடித்து உமது வழியிலே கூட்டிப்போம். நான் இனி முறண்டு பண்ணமாட்டேன். உமது சித்தமே எனது பாக்கியம் ஆமென்.