குரு கடைசி செபம் சொல்லுகிறபொழுது

என் கர்த்தரே! தேவரீர் என்னுடைய இரட்சணியத்துக்காகப் பலியானதினாலே என்னை முழுதும் உமது தோத்திரத்துக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கிறேன். உமக்குப் பலியான என்னை உமது சித்தத்திற்கு ஒத்த வண்ணமாய் நடத்தும். நான் அனுபவிக்க வேண்டுமென்று தேவரீர் சித்தமாயிருக்கிற துன்பதுரிதங்களை முழுமனதோடு அங்கீகரிக்கிறேன். அவைகள் தேவரீர் கையிலிருந்து வருகிறபடியினாலே அவைகளைப் புகழ்ந்து கையேற்றுக் கொண்டு, தேவரீருடைய துன்ப துரிதங்களோடு ஒன்றாகக் கூட்டி உமக்குக் கொடுக்கிறேன்.

இந்தத் திவ்விய பூசையின் பலனால் என்னைச் சுத்திகரித் தருளும். அற்பப் பாவங்களையும் அருவருத்துத் தள்ளுவேன், விசேஷமாய் என்னிடத்திலிருக்கிற துர்க் குணத்தினால் மேற்கொள்ளுகிற பாவத்தில் விழாதப்படிக்கு எச்சரிக்கையா யிருப்பேன். உமது திருக் கற்பனைகளை மீறுகிறதை விடச் சகல துன்ப துரிதங்களை அனுபவிக்கவும், உயிரை முதலாய் இழக்கவும் துணிகிறேன் சுவாமீ.