ஆகமன காலத்தில் வேண்டிக் கொள்ளும் வகையாவது

மனிதருக்காக குழந்தையாய்ப்பிறந்த திவ்விய சேசுவே, அர்ச். மாதாவின் திருவயிற்றிலிருந்து மாட்டுக்கொட்டிலிலே நீர் பிறந்தபோது அவ்விடத்தில் உமக்கு இருந்த வருத்தமும், இக்கட்டும், ஈனமும், உம்முடைய திவ்விய திருத்தாயார் உம்மைக் கட்டி அரவணைத்த இன்பத்தினால் பரிகாரமானதுமன்றி உமக்குப் பிரியமாயிருந்ததே! அதை நான் தியானித்து நீர் மோக்ஷத்திலிருந்து என் இருதயத்தில் வரும் தருணத்தில் நீச அப்பரூபமெடுத்த உமது மட்டில்லாத தாழ்மைக்குப் பரிகாரம் பண்ணி, உமக்குப் பிரியமாகத்தக்க விதமாய் உம்மை ஆராதித்து, ஸ்துதித்து உமக்குத் தோத்திரம் செய்ய வேண்டுமென்று ஆசைக் கொண்டிருக்கிறேன். நான் எவ்வளவு ஆசை கொண்டிருந்தாலும் என்னால் முடியாதென்று கஸ்திப்பட்டுக் கடைசியாய் நான் செய்கிற மன்றாட்டு யாதென்றால், என்னிருதயத்தில் என்னால் உமக்கு யோக்கியமான ஆராதனையும் தோத்திரமும் வருகிறதில்லை என்கிற கஸ்தியினாலும், உம்மை என் இருதயத்தில் அடைய வேண்டுமென்கிற ஆசையினாலும், நான் விடுகிற கண்ணீரை உம்முடைய தாயார் மாட்டுக்கொட்டிலிலே உமக்குப் பண்ணின உத்தம ஊழியத்தோடு ஒன்றாகக் கூட்டி கைக்கொள்ள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். இந்த மன்றாட்டுக்கு இரங்குவீரானால், என் இருதயத்தில் உமக்கு வருகிற குறைகளைப் பாராமல், உம்முடைய திவ்விய தாயாரைப் பார்த்து, நீர் என்னிடத்தில் வந்ததினால் எனக்குச் செய்ய வேண்டிய சகாயங்களை யெல்லாம் தடையில்லாமல் சம்பூரணமாய்த் தயை செய்வீரென்று நம்பியிருக்கிறேன். ஆமென்.