பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஏக சுதனுமாய் எங்கள் ஆண்டவருமாயிருக்கிற சேசுகிறீஸ்துவே! தேவரீர் சிலுவையில் அறையுண்டிருக்கும்போது மகா கொடூர கஸ்தி வேதனைப்பட்டது மல்லாமல், விசேஷமாய் உமது திரு ஆத்துமம் திருச் சரீரத்தை விட்டுப் பிரியும்பொழுது சொல்லிலடங்காத வேதனையை அனுபவித்தீரே. அந்தக் கஸ்தி நிர்ப்பந்தங்களை எல்லாம் பார்த்து உமது திரு மரணத்துக்கு நான் பங்காளியாயிருக்கும்படி அடியேன் நல்ல மரணம் அடையக் கிருபை செய்தருளும் சுவாமீ. சேசுவே, உம்முடைய திருத் தாயாருக்கும் உமக்கும் நடுவிலிருந்து உமது அன்போடு ஆவி பிரிய அர்ச். சூசையப்பருக்குத் தேவரீர் கிருபை செய்தது போலவும், மகா பக்தி நேசத்தோடு சற்பிரசாதம் உட் கொண்டவுடனே அன்போடு உயிர்விட அர்ச். அமிர்தநாதருக்கு அநுக்கிரகம் செய்ததுபோலவும், "சேசுவே, சேசுவே, சேசுவே" என்று உயிர்விட அர்ச். இஞ்ஞாசியாருக்கு இரக்கம் செய்தது போலவும், ஆவி பிரியுமளவும் அலமாந்து அறிவு தடுமாறாதிருந்து அன்பின் முயற்சியில் உயிர் பிரிய அநேக மாகத்துமாக்களுக்கு அருள் செய்ததுபோலவும், பாவியாயிருக்கிற அடியேனுக்கும் அப்படிப்பட்ட அர்ச்சியசிஷ்டவர்களுடைய மன்றாட்டைக் குறித்துக் கிருபை செய்தருளி, என் ஆவி பிரியமளவும் உமது அன்பு அகலா திருக்கவும், உமதன்பிலே அடியேன் உயிர்விடவும் அநுக்கிரகம் செய்தருளும், சுவாமீ. ஆ என் சேசுவே! என் அன்பிலும் என் அன்போடும், என் அன்புக்காகவும், என் அன்பினாலும் தேவரீர் உயிர்விடத் திருவுளமானதுபோல, அடியேனும் உமது அன்பிலும், உமது அன்போடும், உமது அன்புக்காகவும், உமது அன்பினாலும் உயிர்விட ஆசிக்கிறேன், சுவாமீ. ஆ என் அன்பே! நிர்மலமான அன்பே, உன்னை இத்தனை அற்பமாய் ஸ்நேகித்து இந்த அநீத உலகைவிட்டு என்னைப் பிரித்து, உன்னை ஒருபோதும் அகலாது ஸ்நேகிக்கும் அமல நாட்டில் சேர்த்தருளுவாயாக. அர்ச். மரியாயே! சர்வேசுரனுடைய மாதாவே, உம்முடைய நேசத் திருக்குமாரன் சிலுவையில் அறைபட்டிருக்கும்பொழுதும், அவருடைய திரு ஆத்துமம் திருச்சரீரத்தை விட்டுப் பிரியும்பொழுதும், சீவன் பிரிந்த சரீரத்தை உமது திருமடியில் வைத்திருக்கும்போதும் தேவரீர் அடைந்த மட்டில்லாத துக்க வியாகுலத்தைப் பார்த்து, என் மரணசமயத்தில் என் பாவங்களை உமது கருணையால் மறைத்து என் துர்க்குணங்களை உமது கிருபையால் நீக்கி, விசுவாசத்தில் உறுதியும், நம்பிக்கையில் திடமும் தேவ ஸ்நேகத்தில் பெருக்கமும் கொண்டு, சத்துருவின் சோதனையில் அகப்படாமல் ஜெயங் கொள்ளவும், உம்மோடுகூட உம்முடைய திருக்குமாரனை நித்திய காலமும் தரிசித்து ஸ்நேகிக்கவும், எனக்காக விசேஷமாய் அந்த ஆபத்தான சமயத்தில் மன்றாட வேண்டுமென்று மிகுந்த தாழ்ச்சி வினயத்தோடு உம்மை மன்றாடிக் வேண்டிக்கொள்ளுகிறேன்.
உலகத்தைச் செயித்து மோட்சத்தை அடைந்து உங்கள் , இரட்சணியத்தின் மேலே கவலையற்று எங்கள் இரட்சணியத்தின் 'மேல் சிந்தையாயிருக்கும் அர்ச்சியசிஷ்டவர்களே! ஆபத்து நிறைந்த இந்த உலகில் சத்துருக்கள் நடுவில் அகப்பட்டுத் தயங்கி நிற்கிற எனக்கு எப்போதும் அடைக்கலமாயிருக்கவும் உங்களை மன்றாடு கிறேன். மட்டில்லாத நன்மையை உங்களுக்குச் செய்தருளின சர்வேசுரனுடைய மட்டற்ற நன்மைத் தன்மையைக் குறித்து எனக்கு நல்ல மரணம் வரவும், நானும் உங்களோடு ஒருவனா யிருந்து நித்தமும் சர்வேசுரனுடைய நன்மை தனத்தை வாழ்த்தி ஸ்துதித்து வணங்கி நமஸ்கரிக்கவும் எனக்காகப் பரம கர்த்தராகிய அவரை வேண்டிக்கொள்ளுங்கள், ஆமென்.