என் ஆத்தும நேயரான இரட்சகரே! சுத்த இருதயமும் உருக்கமுள்ள பக்தியும், மேலிட்டதினால் நாள்தோறும் தேவரீருடைய திவ்வியநற்கருணை அருந்த வருகிற பாக்கிய வான்களில் நானும் ஒருவனாயிருக்கிறது எனக்கு இனிய ஆனந்தமே. இந்தத் தருணத்தில் உம்மை என் இருதயத்தில் அடைந்து வணங்கி நமஸ்கரித்து என் அவசரங்களை எல்லாம் உமக்கு வெளியாக்கி மெய்யாகவே தேவரீரை உட்கொள்ளுகிற பாக்கியவான்களுக்குத் தேவரீர் கொடுத்தருளுகிற இஷ்டப் பிரசாதங்களுக்கு நானும் பங்காளியானால் எனக்கு எத்தனை நன்மை? ஆனால் என் கர்த்தரே நான் முழுவதும் அடாத்திர னாய் இருக்கிற படியினாலே என் ஆத்துமத்தின் குறைகளைத் தீர்த்தருளும். நான் செய்த பாவத் தோஷங்களை எல்லாம் பொறுத் தருளும். அவைகள் தேவரீருக்குப் பொருந்தாதென்கிறதினால் அருவருத்துத் தள்ளுகிறேன். நான் உம்மோடு ஐக்கியமாக வேண்டுமென்று மிகவும் விரும்பும் உண்மையான என் ஆசையைக் கையேற்றுக் கொள்ளும். உமது கடைக் கண்ணால் பார்த்து என்னைச் சுத்திகரித்தருளும். தாமதமின்றியே உம்மை நான் உரிய முறையோடு உட்கொள்ள என்னை ஆயத்தப்படுத்தும். அந்தப் பாக்கியமான நாள் வருகிறதற்குள்ளாகக் குருவானவர் தேவ நற்கருணையை உட்கொண்டதினால், இந்தத் திவ்விய பூசையைக் காண்கிற சகல விசுவாசிகளுக்கும் வர வேண்டிய பலன் அடியேனுக்கும் பங்குண்டாயிருக்கக் கிருபை செய்தருள வேண்டு மென்று தேவரீரை மன்றாடுகிறேன். இந்த தேவத்திரவிய அநுமானத்தின் பலத்தினால் என் விசுவாசத்தை வளரச் செய்யும், என் நம்பிக்கையை உறுதிப்படுத்தும். என்னிடத்திலுள்ள அன்பைச் சுத்தமாக்கும். நான் உம்மையே நாடி உமக்காகவே சீவித்திருக்கும்படி உமது அன்பை எனக்கு நிறையக் கொடுத்தருளும்.