அர்ச். அகுஸ்தின் என்பவர் சொல்லுவதுபோல திருச்சபையிலே நடக்கும் பூசைப் பலி ஒப்புக்கொடுக்கிறவரும் சர்வேசுரன், ஒப்புக்கொடுக்கறதும் சர்வேசுரனுக்கு, ஒப்புக் கொடுக்கப்படுகிறவரும் சர்வேசுரன், ஒப்புக்கொடுக்கப்படுகிறதும் சர்வேசுரனுக்காக என்கிறதினாலே இந்தப் பூசைப் பலி ஒருக்காலும் சர்வேசுரனுக்குப் பிரியமில்லாமற் போகவும் கூடாது. இதைவிடச் சர்வேசுரனுக்குப் பிரியமானது ஒன்றும் இருக்கவும் கூடாது.
இந்தப் பூசையின் பலன் சர்வலோக பாவத்தைப் பொறுக்க வல்லதாயிருக்கிறதல்லாமல், இன்னும் அநேக கோடானுகோடி உலகத்தின் பாவங்களையும் பொறுக்க வல்லதாயிருக்கின்றது. இத்தனை வல்லபமுள்ள பூசை ஒரு நாளிலும் ஓரிடத்திலும் ஒரு நேரத்திலுமாத்திரம் ஒப்புக் கொடுக்கப்படத் திரவுளமாகாமல், எந்நாளும் எவ்விடத்திலும் எந்நேரமுந்தானே ஒப்புக் கொடுக்கப்படச் சர்வேசுரன் திருவுளமானார். இப்படிப்பட்ட பூசை உலகத்தில் இல்லாவிட்டால், இப்பொழுது உலகத்திலே நடந்து வரும் அக்கிரமத்தால் உலகமெல்லாம் வெந்து அழிந்து சொதோங் கோமோரா என்கிற பட்டணங்களைப் போல் ஆகலாம். அநீதம் நிறைந்த இந்த உலகத்தின் பேரில் சர்வேசுரனுக்கு வரும் கோபத்தை இந்தப் பலி ஒன்றே மாற்றி தயை வருவிக்கின்றது. இந்தப் பூசையை எல்லோரும் காணலாம் என்கிறதுமல்லாமல், எல்லோருந்தானே இரவோடே கூட ஒப்புக் கொடுக்கலாம் என்கிறதினால், இந்தப் பூசைப் பலியின் மகத்துவத்தை வர்ணித்துச் சொல்ல ஒருவனாலேயும் ஆகாது.