சகல பரிசுத்த வேதவாக்கியங்களையும் எங்களுக்குப் போதனையாக எழுதுவித்த கிருபையுள்ள ஆண்டவரே! எங்கள் இரட்சகராகிய சேசுகிறீஸ்துவின் மூலமாய் தேவரீர் எங்களுக்கு அருளிச் செய்த பாக்கியமுள்ள நித்திய சீவிய நம்பிக்கையை உமது பரிசுத்த வசனத்தால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாங்கள் பற்றிக்கொண்டு எப்போதும் உறுதியாய்க் கைக் கொள்ளத்தக்கதாக அந்த வாக்கியங்களை நன்றாய்க் கேட்டு, வாசித்து, கவனித்து, கற்றறிந்து உட்கொள்ள எங்களுக்கு கிருபை செய்தருளும். தேவாதி தேவா! மனுக்குலத்தின் நேசா! உமது பேரில் அன்புகூர்ந்த ஆத்துமாக்களுக்கு அமிர்த வாரியே! நித்தியப் பிரகாசா உற்பனங்களைக் கடந்த தயையைப் பெருக்கி மனுக்குலம் ஈடேற அனுக்கிரகம் புரிந்த சர்வேசுரா, புத்தியின் அந்தகாரத்தில் மூழ்கிப் பூலோக மாயையில் சிக்கித் தந்திரங்களால் தத்தளித்துக் கொண்டிருக்கும் எங்களை இப்புவியின் பொய் வாழ்வின் அடிமைத் தனத்திலிருந்து நீக்குவது எப்போது? முன்னொருமுறை மனுக்குலத்தை மீட்டு இரட்சித்தது போல, ஒட்டோலகப் பொதுத்தீர்வை நாளில் பூலோகத்தில் முன் பிறந்தவர்கள், இனிப் பிறக்கப் போகிறவர்கள் எல்லோரும் உமது சமூகத்தில் பொதுத் தீர்வைக்கு வரும் நாளில், நான் உமது இடது பக்கத்திலிருந்து நாணிக்குன்றி நித்திய நரகத்திற்குப் போகாதபடிக்கு இப்போதே நான் கொண்ட பாவ விஷத்தைத் தீர்த்து அக்ஷயம், இலகு, சூட்சம், பிரகாசம் கொண்டு ஒளிரும் சரீரமுள்ளவனாய் உமது வலது பக்கத்திலிருந்து எல்லோரும் மகிழ நான் ஆனந்த மோக்ஷம் அடையச் செய்தருளும் சுவாமீ. ஆமென்.
உலக இரட்சகர் பிரார்த்தனை சொல்லவும்....