பூசை ஒப்புக் கொடுக்கிற செபம்

அகண்டமும் நிர்மலமுமான திரித்துவ ஏக சர்வேசுரா! எங்கள் நாதரான சேசுகிறீஸ்து பாடுபடும் நாளுக்கு முந்தின நாள் இரவமுது செய்யும்போதும் தேவரீருக்குக் கொடுத்த மாசற்ற பலியோடும், உலகம் எங்கும் சகல குருக்களால் ஒப்புக்கொடுக்கப் பட்ட பலியோடும், இனி ஒப்புக்கொடுக்கப்போகிற பலியோடும், நீசப் பாவியாயிருக்கிற அடியேனும் மகா பக்தி நம்பிக்கையோடும் தாழ்ச்சி வினயத்தோடும் சேசுநாதருடைய கருத்தோடும் என் கருத்தையும் ஒன்று சேர்த்து, குருவின் கைங்கிரியத்தைக் கொண்டு இந்தப் பலியைத் தேவரீருக்குக் காணிக்கையாக வைக்கிறேன். ஆண்டவரே! உமது மகிமைப் பிரதாபத்திற்கு அர்ச்சனையாகவும் கர்தத்துவத்திற்குக் காணிக்கையாகவும் சேசுகிறீஸ்துவின் பாடுகளை எப்பொழுதும் நினைப்பூட்டும் அறிக்கையாகவும் தேவ மாதா முதலிய சகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கும், நீசப் பாவியா யிருக்கிற அடியேனுக்கும், இது வரைக்கும் தேவரீர் செய்து வருகின்ற மட்டில்லாத உபகாரங்களுக்கும், இனி நித்தியமும் செய்யப்படும் உபகாரங்களுக்கும், நன்றியறிந்த தோத்திரமாகவும், சீவியத்திலிருக்கிறவர்கள் மரித்திருக்கிறவர்களான சகல விசுவாசி களுடைய பாவப் பொறுத்தலுக்கும், (இன்னார் இன்னார் இன்னின்ன) உதவி சகாயம் அடையும் படிக்கும், நான் யாராருக்காக வேண்டிக் கொள்ள வேண்டி இருக்குமோ, அவர்கள் எல்லோரும் கடைசியாய் மரித்தவர்கள் இளைப்பாற்றி அடையவும் உயிரோடு இருக்கிறவர்கள் தேவரீரை அறிந்து நேசித்து இந்தப் பரதேசத்தில் உம்மைத் தோத்தரித்தபின் நித்தியமும் தங்கள் ஊரில் உம்மை வாழ்த்தி ஸ்துதித்து வணங்கும்படிக்கும், குருவின் கைங்கிரியத்தைக் கொண்டு அடியேன் தேவரீருக்கு ஒப்புக் கொடுக்கிற இந்தப் பூசைப் பலியைத் தேவரீர் கையேற்றுக் கொண்டு, நீசனாயிருக்கிற அடியேன் மன்றாட்டினுக்கு செவிக் கொடுத்தருள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். இந்த மன்றாட்டுகளை எல்லாம் உமது ஏக சுதனான சேசுநாதருடைய திரு முகத்தைப் பார்த்து தந்தருளும் ....... ஆமென்.